நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 484 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 45,726 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 479 பேர் உள்ளடங்குவதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை மற்றும் சிறைச்சாலைகள் ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடைய கொவிட் 19 தொற்றுறுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,977 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 5 பேருக்கும் நேற்றைய தினம் கொவிட்19 தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் ஜோர்தானை சேர்ந்த மூன்று பேரும், பிரித்தானியாவில் இருந்துவந்த ஒருவரும், கடலோடி ஒருவரும் அடங்குகின்றனர்.
7247 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், நேற்றைய தினம் 445 கொவிட் 19 நோயாளர்கள் குணமடைந்தனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையில் 38 ஆயிரத்து 262 நோயாளர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தில் நேற்றைய தினம் 13 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன் எமது செய்தி பிரிவிற்கு இதனைத் தெரிவித்துள்ளார்.