யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டவிரோதமானது: பல்வேறு அழுத்தத்தால் இடித்தோம்- துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது.

அதை அகற்றுமாறு தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் எம்மீது பிரயோகிக்கப்பட்டு வந்தன. அதற்கமைய அந்த நினைவுத் தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்குச் செல்ல நேர்ந்தது.

பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள்நுழைந்து அந்த நினைவுத்தூபியை அகற்றியிருக்கக்கூடும்.

அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்துக்கு அழகல்ல என்பதால் நாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்தோம்” என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் குறித்த நினைவிடம் மாணவர்களால் 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.