நாசா செல்லும் ஏழை சிறுமியின் ஒற்றை வேண்டுகோள்; ஒட்டுமொத்த கிராமமே மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவி ஜெயலட்சுமி காலையில் வீட்டு வேலை முடித்து விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் மாலை நேரத்தில் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கிலும் செலவுகளுக்காக தனது வேலையை தொடர்ந்து செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது 12-வது படிக்கும் மாணவி ஜெயலட்சுமி நாசா செல்ல தயாராகி வருகிறார்.

அவர் நாசாவுக்கு சென்று வருவதற்கு தேவைப்படும் பணத்திற்கு பலர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

இவரை, கிராமாலயா என்ற தொண்டு நிறுவனம் மாணவியை தொடர்பு கொண்டுள்ளது. ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேட்குமாறு கூறியுள்ளனர்.

அப்போது மாணவி ஜெயலட்சுமி தன்னை பற்றியும், தனது குடும்பத்தினரையும் பற்றி மட்டும் சிந்திக்காமல் தனது கிராமத்தை பற்றியே நினைத்துள்ளார். தங்கள் பகுதியில் இருக்கும் 126 வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தருமாறு கேட்டுள்ளார்.

இதனால், ஜெயலட்சுமி குடியிருக்கும் பகுதியில் உள்ள 126 வீடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

இந்த சிறு வயதிலேயே பொதுநலத்தில் அதிகம் ஆர்வமுள்ள சிறுமிக்கு ஊர் மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.