யாழ் பல்கலையில் அகற்றப்பட்டது தூபியே அல்ல! மீண்டும் துணைவேந்தரின் குதர்க்கமான பதில்!

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் அகற்றப்பட்டது ஒரு தூபியே அல்ல, அது ஒரு அரைகுறை கட்டமைப்பு என தெரிவித்துள்ளார் யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா.

அவருக்கும், ஊடகத்துறை சார்ந்த ஒருவருக்குமிடையில் நடந்த உரையாடலின் ஒலிப்பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது, அந்த ஒலிப்பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்குள் சுகாஸ் மதிலேறி குதித்து வந்ததால் அவர் அப்படி சொல்கிறார், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மையப்படுத்தியே நடவடிக்கைகள் இடம்பெற்றன, மற்றைய தூபிகளை அகற்றும் நோக்கம் இருக்கவில்லை.

சில விடயங்களிற்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும், இல்லையெனில் எந்த அலுவலகத்தையும் நடத்த முடியாது, இது ஒரு அரச நிறுவனம், அரசின் உத்தரவுகளிற்கு கட்டுப்பட வேண்டும்.

பல்கலைகழகத்தில் 50, 55 வீதம் சிங்கள மாணவர்கள் கற்கிறார்கள். அவர்கள் பேஸ்புக்கில் இதைப்பற்றி தொடர்ந்து குறிப்பிட்டே இவ்வளவு பெரிதாகியது.

நான் பதவியேற்பதற்கு முன்னரே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது, பதவி இறக்கியவருக்கும் (முன்னாள் துணைவேந்தர் விக்னேஸ்வரன்) இந்த குற்றச்சாட்டினாலேயே இறக்கினார்கள்.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு, டி.ஐ.ஜி, இராணுவம் ஆகியன, இந்த தூபியை அகற்ற அழுத்தம் தந்தன.

தூபியை அகற்றிய அன்று, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என்னிடம் ஓடிவந்து, சுகாஷ் ஆட்கள் உள்நுழைந்து விட்டார்கள் என்றார், நான்தான் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்க சொன்னேன். சம்பவம் பற்றி பேஸ்புக்கில் பார்த்தோ என்னவோ, பலாலி இராணுவ கட்டளை மையத்திலிருந்து தொடர்பு கொண்டனர்.

அடாத்தாக ஆட்கள் உள்நுழைந்துள்ளார்கள், அவர்களை அகற்ற வேண்டுமென குறிப்பிட்டேன். தன்னால் நடவடிக்கையெடுக்க முடியாதென்றும், டி.ஐ.ஜி உடன் தொடர்புகொள்ளுமாறு தொடர்பிலக்கத்தை தந்தார். நான் அவருடன் பேசினேன். அவர் உடனே பொலிசாரை உள்நுழைய கட்டளையிட்டார்.

பொலிசார் உள்நுழைந்த உள்நுழைந்தவர்களை வெளியேற்றினார். அத்துடன் எமது பணி முடிந்தது. வெளியில் நின்று கத்துவதோ, போராடுவதோ அது அவர்களை பொறுத்தது. அவர்களின் உணர்வு பிரதிபலிப்பு.

உள்ளே உடைக்கப்பட்டது ஒரு தூபியே அல்ல, அது அரைகுறையாக கட்டப்பட்ட ஒன்று, இங்குள்ள சில கட்டுமானங்கள் குறித்து பாதுகாப்பு தரப்பு எழுப்பிய கவலைகளிற்கு, ஒரு நடவடிக்கையை எடுத்தோம். அவ்வளவுான், இனி இங்கு வேறொரு தூபியும் அகற்றப்படாது என்றார்.