யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அழைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை மீளவும் அதே இடத்தில் நிறுவுவதற்கான அடிக்கல் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா மற்றும் மாணவர்களால் சம்பிரதாய பூர்வமாக இன்று நாட்டப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்த பல்கலை கழக துணைவேந்தர் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.
அதன் பிரகாரம் காலை 7 மணியளவில் மாணவர்களுடன் பல்கலைக்கழத்தினுள் செல்ல முற்பட்ட போது பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனையும் மீறி துணைவேந்தர் மாணவர்களை அழைத்துக்கொண்டு வளாகத்தினுள் சென்று , பரமேஸ்வரன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்திற்கு மாணவர்களுடன் துணைவேந்தர் சென்ற போது அங்கு வந்திருந்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடுத்து நிறுத்தினார்.
அதன் போது , துணைவேந்தர் , நாம் தற்போது எந்த கட்டுமான பணிகளிலும் ஈடுபடவில்லை. தூபி இடித்தழிக்கப்பட்ட இடத்தில் கல் நாட்டப்போறோம்.
என்னுடைய மாணவர்கள் மூன்று நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனை முடித்து வைக்க வேண்டிய நிலையில் உள்ளேன். எம்மை தடுக்காதீர்கள் என கூறி இருந்தார்.
அதனை அடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதி அளித்த நிலையில் நினைவிடத்திற்கு மாணவர்களுடன் சென்ற துணைவேந்தர் தேவாரம் பாடி , மலர் தூவி நினைவு கல்லினை நாட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.