இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில், ‘போயிங் 737’ விமானம், ஜகார்த்தாவில் இருந்து, நாட்டின் மேற்கு காலிமாண்டன் மாகாணத்தில் உள்ள போன்டியானக்குக்கு, நேற்று முன்தினம் புறப்பட்டது.
குறித்த விமானம் புறப்பட்ட 44 நிமிடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் 56 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணித்துள்ளனர்.
திடீரென மாயமான விமானத்தை தேடும் பணியில், மீட்புப் பணிகள் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் வடக்கே உள்ள ஆயிரம் தீவுகள் பகுதியில், கடலில் சில உலோகப் பொருட்கள் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேடுதல் பணியில் ஈடுபட்ட போது ஜாவா கடல் பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்களும், பயணித்த நபர்களின் உடல் பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் விமானம் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானது உறுதியானது.
இந்த சூழலில் காணாமல் போன விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பதை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
தற்போது இரண்டு கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடத்தினை கண்டுபிடிக்கப்பட்டநிலையில், அவற்றினை மீட்கும் நடவடிக்கையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விமானத்தில் 46 பெரியவர்கள், 7 குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.