கடந்த நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, பலரும் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், சிலர் மாற்று ஆப்பை பயன்படுத்த ஆரம்பிக்க தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து, உலகின் ஆகச்சிறந்த டெக் ஜீனியஸ்களில் ஒருவரான எலான் மஸ்க், “Use Signal” என ஒரு ட்வீட்டை தட்டிவிட்டார். ஏற்கனவே ஃபேஸ்புக் நிறுவனத்தை அடிக்கடி விமர்சித்து வந்த மஸ்க், இந்த ட்வீட்டை பதிவிட்டதும், ஏராளமான அவரது ஃபாலோவர்கள் வாட்ஸப்பில் இருந்து வெளியேறியதோடு, சிக்னல் செயலியை முண்டியடித்துக்கொண்டு இன்ஸ்டால் செய்தனர்.
இதன் பலனாக சிக்னல் செயலியின் சர்வர் க்ராஷ் ஆகும் நிலைக்குச் சென்றது. அதேபோல, ப்ளே ஸ்டோரின் தகவல் பரிமாற்றத்திற்கான செயலிகளின் பட்டியலில் முதலிடத்திற்கும் வந்தது சிக்னல்.
மேலும், சிக்னல் செயலியைப் பொறுத்தவரை, பயனரின் தொலைப்பேசி எண்ணைத் தவிர வேறு எந்த தகவலையும் அந்நிறுவனம் திரட்டுவதில்லை. சிக்னலில், செய்திகள் மட்டுமல்லாமல், அவை தொடர்பான உப தகவல்களும் கூட என்கிரிப்ட் செய்யப்படுகின்றன என்பது இதில் கூடுதல் பாதுகாப்பு.
இதுவே அந்நிறுவனத்தின் பாதுகாப்பு குறித்த நம்பகத்தன்மையைப் பலரது மனதிலும் ஆழப் பதியவைத்துள்ளது.
வீடியோ கால், குரூப் சாட் போன்ற வாட்ஸப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த சிக்னல் செயலி, பயனர்களின் இணைய அடையாளமான ஐபி அட்ரஸ்ஸை அடையாளம் காட்டாமல் இருக்க, ‘சிக்னல்’ சர்வரில் அல்லாமல் ரிலே கால் மூலம் மற்ற பயனர்களைத் தொடர்பு கொள்ளும் வசதியையும் அளிக்கிறது.
இப்படிப் பாதுகாப்பு மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் சிக்னல், லாப நோக்கில்லாத ‘சிக்னல்’ பவுண்டேஷன் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
சிக்னல் செயலி இத்தனை பாதுகாப்பு அம்சங்களுடன் சேவை வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மற்றொரு தகவல் பரிமாற்ற செயலியான டெலிகிராமும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி புதிய பயனர்களைப் பெற முயன்று வருகிறது.
எது எப்படியோ.. பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பான அம்சங்களை எந்த நிறுவனம் வழங்குகிறதோ அதைத்தேடிதான் மக்களும் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.