ஐ.நா ஆவணத்தில் அனைவரும் கையொப்பம்? விக்னேஸ்வரன் கையொப்பத்தால் வெடித்தது சர்ச்சை

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது.

இந்த அறிக்கையில், தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சித் தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட போதும், இறுதியில் விக்னேஸ்வரன் மட்டுமே கையெழுத்திட்ட இறுதி ஆவணத்தை அனுப்பியதாக ஊடகம் ஒன்றிற்கு ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது.

அது குறித்து தமிழ் மக்கள் கூட்டணி தரப்பிலிருந்து பிரமுகர் ஒருவர் ஊடகத்திற்கு மேலதிக தகவல்கள் சிலவற்றை வழங்கினார்.

“ஆரம்பத்தில் எமது கூட்டணியிலுள்ள பல கட்சிகளின் தலைவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள். ஏனெனில் நேற்று இரவு அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிட்டு, எமது தரப்பு ஆவணத்தை தயாரித்தோம். அதை 7 மணிக்கு சற்று பின்னராக அனுப்பி வைத்தோம்.

பின்னர், சுமந்திரன் தொடர்பு கொண்டு, கையெழுத்துக்கள் தனித்தனியே வெள்ளைத்தாளில் இடப்பட்டு தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதையும் அனுப்பி வைத்தோம்.

பின்னர் இன்று காலையில் ஊடகங்களில்தான் புதிய வரைபொன்று வெளியானது. அதில் விக்னேஸ்வரனின் கையொப்பம் மட்டுமே இருந்தது. முன்னர் குறிப்பிடப்பட்ட ஆட்களின் பெயர்களிற்கு மேலதிகமாக, லெற்றர் பாட் அமைப்புக்களும் அதில் கையொப்பமிட்டுள்ளன.


இறுதியான ஆவணத்தில் இணைக்கப்பட்ட கையொப்பம்

தமிழ் மக்கள் கூட்டணியின் அனைத்து பங்காளி கட்சிகளின் கையெழுத்துடன்தான் அனுப்பி வைத்தோம்.

ஆனால், அதில் விக்னேஸ்வரனின் கையொப்பம் மாத்திரம் வெட்டியெடுக்கப்பட்டு, புதிய ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ளது போல தெரிகிறது.

இதனால், விக்னேஸ்வரனும் பெரும் அதிருப்தியில் இருக்கிறார். தனக்கு தெரியாமலே இது நடந்ததாக அவர் கூறுகிறார். அதை நாம் நம்புகிறோம். அது தவறெனில், சம்பந்தப்பட்டவர்கள்தான் நிலைமையை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த வரைபு அனுப்பப்பட்டு விட்டதா இல்லையா என்பதை கூட இப்பொழுது சொல்ல மறுக்கிறார்கள். வெளிப்படை தன்மையில்லாமல் இந்த நடவடிக்கைகள் நடக்கிறது“ என்றார்.

இந்த புதிய நிலைமையையடுத்து, தமிழ் மக்கள் கூட்டணி தனது முன்னைய வரைபை மேலும் சில தரப்புக்களுடன் இணைந்து தனித்து சமர்ப்பிப்பது குறித்து ஆராய்வதாக ஊடகம் ஒன்று அறிந்தது.

தமிழ் மக்கள் சார்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பலர், பல சந்தர்ப்பங்களில் வெளிப்படைத்தன்மை, அறத்தின்பால்பட்டு செயற்படாமையே தமிழ் மக்களிடையே பிளவுகள் அதிகரித்து செல்ல காரணமாக அமைகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.