“தற்போது இலங்கையில் இந்திய -இலங்கை – சீன முக்கோண அரசியல் போட்டி அரங்கேறி வருகின்றது.
யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிரான நினைவுத் தூபியை இலங்கை அரசு இடித்தமை இந்த முக்கோண அரசியல் இராஜதந்திர போட்டியின் ஓர் அங்கமே” என கட்டுரையாளர் தி. திபாகரன், M.A தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
சிங்கள அரச இயந்திரத்தின் உதிரிப் பாகமாக விளங்கும் தமிழ் உயர் அதிகாரிகளைப் பயன்படுத்தித் “தன் கையால் தன் கழுத்தை அறுக்க வைக்கும்” தமிழின எதிர்ப்பு அரசியலை சிங்கள அரசு மிக வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றது.
அதன்படி யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரை கருவியாகக் கொண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இலங்கை அரசு உடைக்கச் செய்தமை அமைந்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் இருந்த இந்த தூபியை, அத்துடன் ராஜபக்சக்கள் ஆட்சிக்கு வந்தபின்பும் ஒரு வருடத்திற்கு மேலாக நடைமுறையில் இருந்துவந்த இந்தத் தூபியைத் திடீரென்று இரவோடு இரவாக அரசு உடைத்தமைக்குப் பின்னால் இருந்த அரசியல் ராஜதந்திர பின்னணி என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
வெளிப்படையாக பார்த்தால் அது ஈழத் தமிழருக்கு எதிராக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபி சார்ந்த விடயம் போலத் தோன்றினாலும் அடிப்படையில் இந்திய – இலங்கை -சீன அரசுகள் சார்ந்த அரசியல் இராஜதந்திர விவகாரமாகவே உள்ளது.
இலங்கைத் தீவை மையமாகக்கொண்டு சீனா வகுப்பிற்கும் இந்து மாகடல் சார்ந்த பிராந்திய அரசியல் மற்றும் உலகளாவிய அரசியல் வியூகத்திற்குள் இலங்கையைத் தனது இடுக்குப் பிடிக்குள் வைத்திப்பதற்கான அரசியலை சீனா முன்னெடுத்து வருகின்றது.
இலங்கைத்தீவில் சீனாவின் தலையெடுப்பானது இந்து மாகடலில் சீனாவை நிலைகொள்ளச் செய்வதுடன் 7500 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீண்ட கடல் எல்லையை கொண்ட இந்தியாவின் பாதுகாப்பு இதன் மூலம் பெரிதும் கேள்விக்கு உள்ளாகி விட்டது.
ஆதலால் இலங்கை – இந்தியா – சீனா சார்ந்த முக்கோண உறவு என்பது இந்தியாவுக்கு ஒரு பெரும் ஜீவ மரணப் போராட்டம் ஆகும்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் ஜெய் சங்கர் இலங்கைக்கு ஜனவரி 5ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
அவ் விஜயத்தின் போது இலங்கை- இந்தியா சார்ந்த அரசியல், பொருளாதாரம், துறைமுகம் தொடர்பான பல விடயங்கள் பேசப்பட்ட
போதிலும் அவற்றில் இந்தியா எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஈழத் தமிழர் விவகாரம் குறித்து இராஜதந்திர பரிபாஷையில் இலங்கையை முன் எச்சரிக்கை செய்யும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் பேச்சுக்கள் அமைந்தன .
அதாவது இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும், சமத்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று கூறியவுடன் அவ்வாறு தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது “இலங்கைக்கு நல்லது” என்று குறிப்பிட்டார்.
இராஜதந்திர அர்த்தத்தில் அவ்வாறு தீர்வுகாணாவிட்டால் அது இலங்கைக்கு பாதகமானது என்ற பொருளும், அதேவேளை இந்திய அரசு அதைத் தொடர்ந்தும் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்ற பொருளும் கொள்ளக்கூடிய வகையில் பல பொருள் தரும் வார்த்தைப் பிரயோகங்கள் அதில் உள்ளன.
உண்மையான அர்த்தத்தில் இலங்கை அரசு இதனை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டது. எனவே அதற்குப் பதில் அளிக்க இலங்கை அரசு தயாரானது.
இலங்கை மண்ணைவிட்டு ஜெய் சங்கர் நாடு திரும்பிய மறுநாள் அதற்குப் பதிலடியாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை அரசு இரவோடிரவாக இடித்துத் தகர்த்தது.
இந்திய அரசுக்கு இது சீற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு ஜெய் சங்கர் சொல்லியதற்கு மறுப்பாக முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உள்ளான தமது உறவினர்களை நினைவுகூறும் “நினைவுகூறல் உரிமையை” சிங்கள அரசு வெட்டவெளிச்சமாக மறுத்துரைக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை உடைத்துக் காட்டியது.
அது இந்திய அரசுக்கு மேலும் சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்திய அரசின் வற்புறுத்தலால் நினைவுத் தூபியை மீண்டும் கட்டுவதாக பாசாங்கான அறிவித்தலை யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் வாயிலாக இலங்கை அரசு அரங்கேற்றியது. இதில் யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் ஒரு பகடைக்காயாய்க் கையாளப்பட்டார்.
இந்திய அரசின் தலையீடு காரணமாகவே மீண்டும் இந்தத் தூபியைக் கட்டுவதான முடிவை இலங்கை அரசு மேற்கொண்டதாக சிங்களப் பொலிஸ் அதிகாரிகளிடம் யாழ் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்.
இதன் மூலம் இந்தியா – இலங்கை அரசுகளுக்கு இடையேயான மோதலின் வெளிப்பாடாகவே மேற்படி நினைவுத் தூபி உடைப்பு விவகாரம் நடந்துள்ளது என்பது வெளிப்படியாய் புலனாகிறது.
உடனடி நிலையில், இந்திய அரசின் வற்புறுத்தலைக் கருத்திற்கொண்டு மீண்டும் நினைவு தூபி கட்டுவதாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் அது தனது சூழ்ச்சி கரமான இன்னொரு திட்டத்தை அரங்கேற்ற தொடங்கியது.
அதாவது தனது அரச இயந்திரத்தின் பணியாளர் ஆகிய யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜாவை பயன்படுத்தி நினைவுத் தூபி கட்டுவதாகக் கூறவைத்து பின்பு அதனை அவர் வாயாலேயே “சமாதானத் தூபி” என்ற திரிபுபடுத்தலுக்கு உள்ளாக்கியது
அரசு.
அதன்படி “சமாதான தூபி” என்பது இனப்படுகொலையை ஆதரிக்கும் தூபியாகும். அதாவது நடந்த யுத்தம் சமாதானத்துக்கான யுத்தம் என்றும் அது இனப்படுகொலையே அல்ல என்றும் அந்த யுத்தத்தின் பெறுபேறாக உருவான “சமாதானம்” நிலவ வேண்டும் என்பதே அதன் பொருளாகும்.
இதில் “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்”என ஒருபுறம் இந்தியா ஏமாற்றப்பட்டமையும் மறுபுறம் தமிழர்களின் நீதிக்கான கோரிக்கையும் , அவர்களின் நினைவுகூறும் உரிமையும் மறுக்கப்பட்டதான சிங்கள அரசின் இராஜதந்திரம் வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.
அத்துடன் மேலுமொரு பதிலடியாக சீனாவுக்கான இலங்கை தூதர் பாலித கோகன்ன இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் பரிசுப் பொருட்களை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிடம் கையளித்து உள்ளார்.
இந்தியாவின் விருப்பங்களை மறுத்த இலங்கை அரசு இந்தியாவிற்கு பதிலடியாக சீனாவுடனான தனது நட்பை வெளிக்காட்டும் வகையில் மேற்படி பரிசுப் பொருட்கள் கையளிக்கப்படும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு இந்திய சீன – இலங்கை முக்கோணப் போர் ஈழத் தமிழர்களின் பேரால் தெளிவுற அரங்கேறி வருகிறது.
எனவே ஆழமான அரசியல் அர்த்தத்தின்படி சீன – இந்திய – இலங்கை யுத்தம் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் வெடிப்பெடுத்துள்ளது என்றே கூறவேண்டும்.” என அவர் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.