திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் பணம் வசூல்.. மணமக்களை பாராட்டிய உறவினர்கள்

பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து, இந்த திருமண விழாவில் மொய் எழுதும் பகுதியில் மொய் எழுதுபவர்கள் டிஜிட்டல் முறையில் போன் பே, கூகுள் பே மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செய்யும் வகையில் ‘QR’ கோடுடன் கூடிய பத்திரிகையை ப்ரிண்ட் செய்துள்ளனர்.

மேலும், திருமண விழாவிற்கு வந்தவர்கள் தங்களது மொய் தொகையை கூகுள் பே மூலமாக செலுத்திச் சென்றனர்.

கொரோனா கால தடுப்பு நடவடிக்கையாக அதிக அளவில் கூடும் கூட்டத்தை குறைக்கும் வகையிலும் அலைச்சலை தவிர்க்கும் வகையிலும் இது போன்ற முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

அதேபோல மொய் எழுதும்போது சில்லறை, கவர் ஆகியவை கிடைப்பது சிரமாக உள்ளது. அதனால் இதுபோன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை முன்னெடுத்துள்ளோம். நேரில் வந்த மொய் பணம் செலுத்த முடியாதவர்கள் கூட கூகுள் பே, போன் பே மூலமாக மொய் பணத்தை எளிதாக செலுத்தலாம்.

இதன் மூலமாக யார் எவ்வளவு மொய் வைத்துள்ளனர். என்பதை தெரிந்துகொண்டு அவர்களுக்கு திரும்ப மொய் செய்யலாம் என மணப்பெண் சிவசங்கரி தெரிவித்தார்.

இதனால், மொய் செய்வதற்காக புதிய முயற்சியை எடுத்துள்ள மணமக்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.