யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்தியாவிலிருந்து இலங்கைத் தலைமைக்கு அந்த தூபியை மீண்டும் கட்டுவது தொடர்பான செய்தியொன்று அனுப்பப்பட்டதாக “ஹிந்து” பத்திரிகை தெரிவித்துள்ளது.
நினைவுச்சின்னம் நள்ளிரவில் இடித்தழிக்கப்பட்ட செய்தி வெளியான ஒருநாள் கழித்து இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடுத்து இந்திய உயர் ஸ்தானிகர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை கடந்தவாரம் சந்தித்து கலந்துரையாடினார் என மகிந்தவின் ஊடகச் செயலாளர் ரோஹன வெலிவிட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்துவிடம் தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக அதிகாரிகள் இரவோடிரவாக அழித்தபோது. மாணவர்களை ஆர்ப்பாட்டம் செய்ய தூண்டியதுடன், போரில் இழந்த தங்கள் அன்புக்குரியவர்களை நினைவு கூரும் தமிழர்களின் உரிமையைத் தடுக்கும் முயற்சி குறித்து கடுமையான விமர்சனங்களை எழுப்பியது.
இந்த இடிப்பை அடித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்த துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா குறித்த நினைவுத்தூபி மீளவும் கட்டி எழுப்பப்படும் என உறுதி அளித்தார்.
இலங்கையின் போருக்குப் பிந்தைய சூழலில் தமிழர்கள் நடத்திய மற்ற எதிர்ப்புக்கள் – குறிப்பாக பலவந்தமாக காணாமல் போன நபர்களின் குடும்பங்கள் அல்லது இராணுவத்தின் வசம் உள்ள நிலங்களை மீட்க நடத்தப்பட்டுவரும் போராட்டங்களுக்கு அதிகாரிகளிடமிருந்து விரைவான பதில் கிடைக்காத போதிலும் இந்த விடயத்திற்கு உடனடியகவே பதில் கிடைத்தது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, திமுக தலைவர் எம்.கே ஸ்டாலின் மற்றும் எம்.டி.எம்.கே பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தனர். வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தனது இலங்கைக்கான பயணத்தை முடித்த ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர் – அந்த சமயத்தில் தமிழர்களின் கவலைகளுக்கு தீர்வு காணுமாறு இலங்கை அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தை பிரதமர் மோடி “கடுமையாக கண்டிக்க” வேண்டுமென ஸ்டாலின் வலியுறுத்தினார்.
புதுடில்லி இந்த சம்பவம் குறித்து உத்தியோகபூர்வ கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும், இராஜதந்திர ரீதியில் நடவடிக்கையை முன்னெடுத்தது.
இந்த இடிப்பு “தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் எதிர்ப்புக்களை மேலும் பரவ வழிவகுக்கும்” என்று உயர் ஸ்தானிகர் பாக்லே பிரதமர் ராஜபக்ஷவிடம் தெரிவித்ததாக கொழும்பை தளமாகக் கொண்ட வார இதழான சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்தித்தாளின் அரசியல் கட்டுரையில், இந்த விடயம் தொடர்பில்”பிரதமர் ராஜபக்ஷ உடனடியாக நடவடிக்கை எடுத்தார்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.