யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவலை துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து’ பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, புலனாய்வுத்துறை, மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றின் அறிவுறுத்தல்களை அடுத்தே நினைவுத்தூபியை இடித்தழிக்க தான் உத்தரவிட்டதாகத் தெரிவித்தார்.
எனினும் பின்னர் நிலைமையை சுமுகமாக்குமாறு அதிகாரதரப்பு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் வெளிநாடுகளில் எதிர்வினைகள் குறிப்பாக தமிழகம் கொந்தளிப்பதாகவும் தெரிவித்தார்.
புனரமைக்கப்படவுள்ள நினைவுத்தூபி போரை விடவும் சமாதானத்தை வெளிப்படுத்தும் எனக்கூறிய துணைவேந்தர், நினைவுத்தூபியை மீள அமைப்பது தொடர்பில் ஆராய மாணவர் ஒன்றியம் உட்பட ஒரு குழுவை அமைத்துள்ளதாகவும் ‘ஹிந்து’பத்திரிகையிடம் மேலும் தெரிவித்தார்.