விற்பனையாகாத லாட்டரி சீட்டால் தமிழக வியாபாரிக்கு அடித்த ஜாக்பாட்; பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி கேரளா அரசு சார்பில் முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது.

இதனிடையே, கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யார் என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும், கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெரியவந்ததுள்ளது.

இதனை அறிந்த ஷரபுதீன் திருவனந்தபுரம் சென்று, லாட்டரி சீட்டை ஒப்படைத்து அதற்கான அத்தாட்சி சான்றிதழை பெற்று கொண்டார்.

மேலும், ரூ.12 கோடி பரிசு விழுந்த உற்சாகத்தில் ஷரபுதீன் கூறுகையில், லாட்டரி சீட்டு வாங்கும் போது எப்போதாவது விற்பனையாகாத சீட்டுக்கு சிறிய பரிசுகள் விழுந்துள்ளன.

ஆனால், எனக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை தற்போது வரை சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.