அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் 9 மாதங்களுக்கு முன்னர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
ஆர்கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 53 வயது Talina Galloway என்பவரது சடலமே, துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் ப்ரீஸர் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் அவரது அறையில் தங்கி இருந்ததாக கூறப்படும் 59 வயது கோரே பொம்மெலி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவர் மீது கொலை வழக்கும் பதிந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே காலோவே மாயமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 17 அன்று பொம்மெலி அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் இறங்கினர்.
ஆனால் பொலிசாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில், வனப்பகுதியான Acorn அருகே ஒரு ப்ரீஸர் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் வழிபோக்கர் ஒருவரின் பார்வையில் பட்டுள்ளது.
மட்டுமின்றி அந்த ப்ரீஸரில் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மாயமான காலோவேயின் வீட்டுக்கும் 150 மைல்கள் தொலைவில் ப்ரீஸரில் துண்டு துண்டாக்கப்பட்ட சடலத்தை மீட்டுள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் அது மாயமான காலோவேயின் சடலம் என உறுதியானது.
இதனிடையே காலோவே மாயமான விவகாரத்தில் பொலிசாரின் சந்தேக வட்டத்தில் இருந்த பொம்மெலி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பொம்மெலியிடம் விசாரணைக்கு பின்னரே, இந்த கொலை விவகாரத்தின் பின்னணி தெரிய வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7 அன்று, காலோவே பேஸ்புக் பக்கத்தில் தமக்கு கொரோனா பாதித்துள்ளதாகவும், இது 9 வது நாள் எனவும், ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளப் போவதில்லை எனவும் பதிவு ஒன்று வெளியானது.
காலோவே குடும்பத்தார் அதை ஒப்புக்கொள்ள மறுத்ததுடன், அவ்வாறான ஒரு பெண்மணியல்ல காலோவே எனவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதுவும் பொம்மெலி கைதாக முக்கிய காரணமாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, அவரது மொபைலில் ரத்தக்கறயை போக்க என்ன செய்ய வேண்டும் என பொம்மெலி தேடியதும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.