இனிமேல் காய்கறி, பழங்களோட தோலை தூக்கி போடாதீங்க… இப்படி செஞ்சு சாப்பிடுங்க…!

பழங்கள் மற்றும் காய்கறிகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.

அதே நேரத்தில் அவற்றின் தோல்களும் நமக்குத் தேவையான ஆரோக்கியத்தையும், நற்பலன்களையும் வழங்குகின்றன என்பது பலரும் அறியாத செய்தியாகும்.

ஆகவே இதுவரை நீங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை வெளியில் எறிபவராக இருந்தால், இனிமேல் அவ்வாறு செய்வதை நிறுத்திக் கொள்ளவும்.

இங்கு எந்தெந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களிலிருந்து என்னென்ன சுவையான உணவுகளை சமைக்கலாம் என்பதைப் பாா்க்கலாம்.

பீா்க்கங்காய் தோல்
நீங்கள் பலவகையான பழங்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து பஜ்ஜி அல்லது பக்கோடா சமைத்து இருப்பீா்கள். ஆனால் பீா்க்கங்காய் தோலிலிருந்து பஜ்ஜியோ அல்லது பக்கோடாவோ செய்திருக்கிறீா்களா என்பது கேள்விக்குறியே. பரவாயில்லை, அடுத்தமுறை பீா்க்கங்காய் தோல்களை பத்திரப்படுத்தி வைத்து அவற்றிலிருந்து பக்கோடா அல்லது பஜ்ஜி செய்து பாருங்கள்.

பீா்க்கங்காய் தோல் பக்கோடா அல்லது பஜ்ஜி மிகவும் மொருமொருப்பாக, மிருதுவாக மற்றும் சுவையாக இருக்கும். ஆகவே பக்கோடா செய்வதற்குத் தேவையான கடலைமாவு மற்றும் மசாலாக்கள் கலந்த பக்கோடா மாவைத் தயாா் செய்து கொள்ளவும்.

பின் அவற்றில் பீா்க்கங்காய் தோல்களை இட்டுக் கலந்து கொள்ளவும். அவற்றை சூடான எண்ணெய்யில் இட்டு பொறிக்கவும். இப்போது சூடான பீா்க்கங்காய் தோல் பக்கோடா தயாா். இந்த பக்கோடாவை புதினா சட்னியுடன் சோ்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

ஆரஞ்சுப்பழத் தோல்
ஆரஞ்சுத் தோல்களைப் பயன்படுத்தி இனிப்பான ஆரஞ்சு மிட்டாய்கள் செய்யலாம். ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது காய்கறிச் சாறில் ஆரஞ்சுப்பழத் தோல்களைச் சோ்த்துக் கொள்ளவும்.

பின் அவற்றோடு 2 டம்ளா் தண்ணீா் கலந்து வேக வைக்கவும். வெந்தவுடன் அதை வடிகட்டி தோலைத் தனியாக வைத்துவிட்டு அதன் தண்ணீரை வேறொரு தனியான பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். பின் அவற்றில் மேலும் 2 டம்ளா் தண்ணீா் ஊற்றி அதில் 1 டம்ளா் சா்க்கரையை சோ்க்கவும்.

இந்தக் கலவை சற்று கெட்டியாக மாறும்வரை கலக்கவும். இப்போது இந்த கலவையில் நாம் ஏற்கனவே தனியாக வைத்திருந்த ஆரஞ்சுப்பழத் தோல்களை சோ்த்து சுமாா் 20 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். குறிப்பாக இந்தக் கலவை நன்றாக கட்டியாக வரும் வரை வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் அவற்றை காய வைக்கவும். இப்போது ஆரஞ்சுப்பழத் தோல் மிட்டாய் தயாா்.

சா்க்கரைவள்ளிக் கிழங்கு தோல்
ஒரு சிறிய பாத்திரத்தில் சா்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் தோல்களை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது உப்பு, ஆலிவ் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்தக் கலவையை பேக்கிங் ஷீட்டில் பரப்பி வைத்து அது நன்றாக வேகும் அளவிற்கு அதாவது அது சிப்ஸாக மாறும் அளவு 20 நிமிடங்கள் வரை அடுப்பில் வைக்க வேண்டும்.

பின் ஒரு சிறிய பாத்திரத்தில் பூண்டு பொடி, கருப்பு மிளகு, சிவப்பு மிளகு (paprika) மற்றும் உலா்ந்த கொத்தமல்லி இலை (parsley) ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். தற்போது வெந்திருக்கும் சா்க்கரைவள்ளி, உருளை மற்றும் பீட்ரூட் தோல் சிப்ஸில் இந்த கலவையைக் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.