முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நான் ஒன்றை அமைத்து தருகிறேன்! கனடா மேயர் வாக்குறுதி

முள்ளிவாய்க்காலில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்துக்கு பதிலாக, தான் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக கனடா மேயர் ஒருவர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) வாக்களித்துள்ளார்.

இலங்கையில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்ட விடயம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

2019ஆம் ஆண்டு, இலங்கை உள்நாட்டுப்போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.

அந்த சம்பவம் உலக முழுதும் வாழும் தமிழர்களை கொதிப்படையச் செய்தது. ஆகவே, ப்ராம்ப்டன் மேயரான பேட்ரிக் பிரவுன், தமிழ்ச் சமூகம் கனடாவுக்கு செய்துள்ள நல்ல விடயங்களுக்கு பதில் செய்யும் வகையில், இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்துத் தர இருப்பதாக அறிவித்துள்ளார்.

இன்று, ப்ராம்ப்டன் நகர கவுன்சில் இலங்கையில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்துத் தருவதற்கு ஆதரவாக ஏக மனதாக வாக்களித்துள்ளது.

இலங்கையில் நடந்த வரலாற்றை மூடிமறைக்க சிலர் முயலும் நிலையில், நாம் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியாது என கனடா மேயர் பேட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.