யாழில் விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல்? குடும்பப் பெண் உட்பட இருவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வீடொன்றை சிறப்பு அதிரடிப் படையினர் சுற்றிவளைத்த நிலையில் ஏற்பட்ட முறுகலில் இரண்டு பொதுமகன்களும் சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த ஆண் குடும்பத்தலைவர் ஒருவரும் குடும்பப்பெண் ஒருவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெட்டுக்காயத்துக்கு உள்ளாகிய சிறப்பு அதிரடிப் படை உத்தியோகத்தர் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை பருத்தித்துறை தும்பளை எல்லை வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுக்குச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் கஞ்சா போதைப்பொருள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் தாம் சோதனை நடத்த உள்ளதாக தெரிவித்த போது வீட்டின் உரிமையாளர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூற்ப்படுகின்றது.

இதனையடுத்து சிறப்பு அதிரடிப் படையினருக்கும் அந்தக் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் சிறப்பு அதிரடிப் படையினர் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதன்போது தமது உத்தியோகத்தர் மீது வாளால் வெட்டிய ஒருவர் அங்கிருந்து தப்பிச் சென்றதுடன் தமது வாகனத்துக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக சிறப்பு அதிரடிப் படையினர் பருத்தித்துறை பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சிறப்பு அதிரடிப் படையினரின் தாக்குதலில் காயங்களுக்குள்ளானதாக குடும்பத்தலைவரும் குடும்பப் பெண் ஒருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.