பொத்துவில் – பொலிகண்டி பேரணியை குழப்பும் சில அரசியல்வாதிகளிடம் முக்கிய கோரிக்கை

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி இன்று மூன்றாவது நாளாக திருகோணமலை சிவன் ஆலயத்தின் முன்பாக இருந்து ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய பேரணியில் மேலும் பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்டவர்கள் இன்று பேரணியில் கலந்து கொள்வார்கள்.

எனினும், இன்று முதல் பேரணியில் அரசியல் பிரமுகர்கள் முன்வரிசையில் கலந்து கொள்ள வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்திள்ளனர்.

பேரணியின் முன்வரிசையில் இதுவரை எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் போன்றவர்கள் அதிகம் தெரிந்தார்கள்.

அது தவிர, முன்வரிசையில் வருவதில் ஏனைய அரசியல்வாதிகளிடமும் ஒரு போட்டித்தனம் தெரிந்தது. அனைவரும் ஒரே பேரணியில் வந்தாலும், அரசியல் போட்டி திரைமறைவில் அரங்கேறி வந்தது.

என்றாலும், அதற்குள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் அதிகம் செய்தனர். பேரணியின் இரண்டாம் நாளான நேற்று முஸ்லிம் பகுதி வரவேற்புக்களை பெற, அவர்கள் இருவரும் முன்னரே சென்றனர் என்றும் ஏனையவர்களிற்கு அதிருப்தியிருந்தது.

இதனால் பேரணியின் பின்பகுதியில் சென்ற குறிப்பிட்ட தொகையானவர்களிற்கு ஓட்டமாவடி, கிண்ணியா பகுதிகளில் முஸ்லிம்களால் வழங்கப்பட்ட வரவேற்பு பற்றியும் அறிந்திருக்கவில்லை, இந்த அதிருப்தி ஏற்பாட்டாளர்களிடம் உள்ளது.

இந்த பேரணி எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் தரப்பினரால் சாதகமான அரசியல் பிம்பத்தை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது என்ற அதிருப்தி ஏற்பாட்டாளர்களிடம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று முதல் அரசியல் பிரமுகர்கள் முன்வரிசையில் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தனிநபர் அரசியலை முன்னெடுக்காமல் இனத்தின் அரசியலை முன்னெடுப்போம் என நேற்றைய பேரணியின் முடிவில் வேலன் சுவாமிகள் சூசகமாக குறிப்பிட்டது இதைத்தான்.

ஏற்பாட்டாளர்களின் அதிருப்தி, குறிப்பிட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நேற்றைய தினமே நேரில் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்தும், அரசியல் பிரமுகர்கள் தனிநபர் பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் இன்றும் ஈடுபட்டால், இன்று ஏற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து ஊடக சந்திப்பு நடத்தப்பட்டு, குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களிடம் இந்த விடயம் பகிரங்க கோரிக்கையாக விட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவற்றையும் மீறி அரசியல் வாதிகள் போராட்டத்தை திசை திருப்பும் நோக்குடன் செயற்பட்டால் அவர்கள் போராட்ட பகுதியில் இருந்து அகற்றப்படுவார்கள் என்ற செய்தியும் குறிப்பிட்ட தரப்பினருக்கு கூறப்பட்டுள்ளது.

இன்று முதல், மத தலைவர்கள், சிவில் சமூகத்தினர் மட்டுமே முன்வரிசையில் செல்லவும், அதன் பின்னால் அரசியல்வாதிகள் செல்லவும் ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் இருந்து பேரணி ஆரம்பிக்கும்.