தெலுங்கானா மாநிலம், மண்டல் மாவட்டத்தின் அயவரிகடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா ரெட்டி(22). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த டிசம்பர் மாதம், உறவினரான நாகசேசு ரெட்டி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்து இருவரும்,கோத்தலங்கப்பள்ளி என்ற ஊரில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான், கடந்த வாரம் நவ்யா ரெட்டி காணவில்லை, அதன் பின் கணவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், உடனடியாக காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்தார்.
பொலிசாரும் உடனடியாக நவ்யா ரெட்டியை தேட ஆரம்பித்துள்ளனர். அவர்கள், அவரது செல்போன் நம்பர் சிக்னல் வைத்தும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, அவர் காணமல் போன பகுதியில் இருக்கும், சிசிடிவி காட்சிகளையும் ஆராய ஆரம்பித்துள்ளனர்.
அப்போது, முத்தகுடெம், குப்பெனகுந்த்லா போன்ற பகுதிகளில் இருக்கும் சிசிடிவி கமெராவை பொலிசார் ஆராய்ந்து பார்த்த போது, இரு சக்கர வாகனம் ஒன்றில், ஆண் நபருடன் நவ்யா பின்னாடி உட்கார்ந்து செல்வது பதிவாகி இருந்தது.
அதன் பின் அந்த ஆண் நபர் யார் என்று பொலிசார் விசாரித்த போது, அது நவ்யாவின் கணவர் என்பது தெரியவர, பொலிசார் நவ்யா ரெட்டியின் கணவரிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணத்திற்கு முன் தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இருப்பினும் பெற்றோரின் விருப்பத்தின் பேரில் இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பின் நவ்யாவை திருமணம் செய்து கொண்டதால், கடும் மன உளைச்சலுக்குள்ளானேன்,
நவ்யா உயிரோடு இருக்கும்வரை, தன்னால் காதலியுடன் வாழ முடியாது என்பதால், நவ்யாவை கொலை செய்ய முடிவெடுத்தேன்.
அதன் படி, இது குறித்து அவர் தன் காதலியிடம் சொல்ல, அவரும் சரி என்று கூற இவர் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று, நவ்யாவை குக்கலகுட்டா என்ற மலை உச்சிக்கு நாகசேசு அழைத்து சென்றுள்ளார் அங்கு அவரிடம் ஆசை வார்த்தைகளாய் பேசிய அவர், பிறகு களைப்பாக இருக்கிறாய் என்று சொல்லி ஜூஸ் கொடுத்துள்ளார்.
அந்த ஜுஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்ததால், நவ்யா மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் உடனடியாக நாகசேசு துப்பட்டாவை வைத்து, நவ்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பிறகு, மலையிலேயே நவ்யாவின் சடலத்தை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் நவ்யாவின் செல்போனில் இருந்து, நவ்யாவின் அப்பாவுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அப்பா என்ஜினியரிங் படிக்க முடியாமல் போனதால், நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று அனுப்பியுள்ளார்.
அதன் பிறகே அவர் மனைவியை தேடுவது போன்று நடித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மலைஉச்சிக்கு சென்ற பொலிசார் நவ்யா சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, நாகசேசுவை கைது செய்தனர்.
இந்த விஷயத்தை அறிந்த நாகசேசுவின் காதலியான வீனிலா இரயிலில் பாயந்து தற்கொலை செய்து கொண்டார். பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.