சாத்துரில் நிகழ்ந்த வெடிவிபத்து தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது.
நேற்று நடந்த இவ்விபத்தில் 19 பேர் உடல்கருகி இறந்துள்ளனர், 30க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த 13 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நடுசூரங்குடி கற்பகவள்ளி (7 மாத கர்ப்பிணி), அன்பின்நகரம் சந்தியா, மேலப்புதூர் சின்னத்தம்பி, நேசமணி, படந்தால் கோபால்,
ரவிச்சந்திரன், செல்வி, ரெங்கராஜ், ஏழாயிரம்பண்ணை தங்கலட்சுமி, கண்ணன், நாராயணன், பாக்கியராஜ், கருப்பசாமி ஆகிய 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை தொடங்கியுள்ளது.
இதில் 7 மாத கர்ப்பிணி பெண்ணான கற்பகவள்ளி, கடந்த மார்ச் மாதமே காதல் திருமணம் செய்து கொண்டார், மூன்று நாட்களுக்கு முன்பு தான் 200 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவரது உறவினர் கூறுகையில், கற்பகவள்ளி நன்கு படித்த பெண், அவரது விருப்பப்படியே காதல் திருமணமும் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பின்னர் அவளை கொடுமைப்படுத்தியுள்ளனர், தினமும் கணவர் குடித்துவிட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதனாலும், குடும்ப வறுமை காரணமாகவுமே கர்ப்பிணியாக இருந்தும் வேலைக்கு சேர்ந்தார் என தெரிவித்துள்ளார் கண்ணீர் மல்க.