தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான 37வது கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளபோகும் விடயங்கள் தொடர்பிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் நிலைப்பாடு தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் திரு பத்மநாபன் மணிவண்ணன்இவ்வாறு கூறுகின்றார் .
கேள்வி : ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ளபோகும் நீங்கள் அங்கு தமிழர் தரப்புக்கு சாதகமான விடயங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்களா?
பதில்: ஆம் நிச்சயமாக கடந்த 2015 இலங்கை தனது ஒப்புதலோடு நிறைவேற்றி கொண்ட 30/1 தீர்மானங்களை இதுவரைக்கும் நிறைவேற்ற தவறியே வந்துள்ளது இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் இலங்கைக்கு 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த காலத்திற்குள்ளும் கூட தமிழ் மக்களுக்கு முழுமையான ஒரு தீர்வினை முன்வைக்க தவறிவிட்டதே எனலாம். ஆகவே இந்த முறை கூட்டத்தொடரில் இலங்கைக்கு பாதகமான நிலையே காணப்படப்போகின்றது.
நிச்சயமாக நாங்கள் தொடர்ந்து இதைப்பற்றி எடுத்துரைத்துண்க்கொண்டுதான் இருக்கின்றோம் முக்கியமாக அங்கிருக்கின்ற நாடுகளின் பிரதிநிகளோடு நாங்கள் ஒவ்வொரு முறையும் இலங்கை என்ன செய்கின்றது என்பதை மிக தெளிவாக எடுத்த்துரைத்து வருகின்றோம் .
இதனைவிட இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதையும் அதற்கு முன்னுரிமை வழங்கியும் வரவிருக்கின்ற 6 வது அரசியல் திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1700க்கும் அதிகமான சட்டத்தரணிகள் கையொப்பத்துடனான அறிக்கையினை ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்பித்திருக்கின்றோம். அத்தோடு தமிழ் மக்களின் நிரந்தர தீர்வுக்கு இது ஒருபோதும் ஒரு தீர்வாக அமையாது என்பதுடன் பொது வாக்கெடுப்பின் மூலமே எமக்கான இறைமையுள்ள ஒரு தேசத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே நாடுகடந்த தமிழீழ அரசினுடைய நிலைப்பாடாகும். அதற்காக நாங்கள் பல்வேறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றோம்
கேள்வி : கடந்த காலங்களில் நாடு கடந்த தமிழீழ அரசின் ஏற்பாட்டில் பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டீர்கள் . இது ஐநா கூட்டத்தொடரில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்த போகின்றது?
பதில்: நாங்கள் கடந்த வருடம் பல போராட்டங்களை தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பிரித்தானியா இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் படியாக அமைந்திருந்தது எனலாம் . இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதி வழங்குவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உறுதியளித்திருந்தது ஆனால் வெறுமனே ஒரு சட்ட அதிகாரம் இல்லாத ஆணைக்குழுவினை நிறுவினாலும் இந்த கூட்ட தொடரின் ஆரம்ப நாட்களில் தான் அதற்கான அதிகாரிகளை இலங்கை அரச அதிபர் நியமித்திருக்கின்றார். இங்கு கவனிக்கப்பட வேண்டியவிடயம் இராணுவ மேஜர் ஜெனரல்களும் நியமிக்கப்பட்டிருப்பது.
இது இலங்கை அரசின் கபடத்தனங்களில் ஒன்றுதான். இந்த அலுவலகம் பாதிக்கப்பட்டோர் மட்டத்தில் நம்பிக்கை இல்லாமலிருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.
இதன் அடுத்த கட்டமாக பன்னாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதற்காக சாட்சியங்களை சேகரிக்கும் வேலைத்திட்டத்தினை செயற்படுத்திக்கொண்டிருக்கின்றோம் என்பதையும் இங்கு கூறிக்கொள்கின்றேன்
கேள்வி : 2015ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்வினை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை மந்த கதியிலேயே நகர்கிறது . கடந்த வருடங்களில் ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்கள் கூட இலங்கை சென்று நிலைமையினை அவதானித்து வெளியிட்ட அறிக்கைகளும் அவற்றையே சுட்டுகின்றது இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரில் தமிழர் தரப்பிற்கு சாதகமான நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கின்றதா ??
பதில்: ஆம் நிச்சயமாக இம்முறை ஆணையாளரினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை எமக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. அதில் சில முக்கிய விடயங்களையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முந்தைய அரசை விட இந்த அரசானது எம்மோடு இணைந்து பொறுப்புக்கூறல் மற்றும் சமரச முயற்சிகளில் இணைந்து கொண்டு செயற்படுவது வரவேற்றுக்கொள்கின்றது இருப்பினும் எடுத்துக்கொண்ட தீர்மானங்களை செயற்படுத்துவதில் மிகவும் மந்த நிலையிலேயே உள்ளது . தற்போதும் இலங்கையில் பொதுவான மனித உரிமைகளில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும் ஏனைய உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் 2 வருட கால அவகாசத்தை பெற்றுக்கொண்டாலும் ஓராண்டு கடந்து விட்ட நிலையில் இதுவரையில் எந்த முன்னேற்றமும் வெற்றியளிக்கவில்லை
நிலைமாற்ற நீதிக்கு ஒரு முழுவிரிவான திட்டமும் அதன் செயலாக்கத்துக்கு வரையறுக்கப்பட்ட காலவரிசை தேவை என்ற போதிலும், இப்படி எதுவும் இது வரை வெளிப்படுத்தப்படவும் இல்லை, இது குறித்துக் கலந்தாய்வும் இல்லை. ஐநா பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதித்து ஆராய விடுவதோடு நின்றுவிடாமல் சபைக்கு உறுதியளித்த விடையங்களை நடைமுறைப்படுத்த இலங்கை முன்வரவேண்டும்
இலங்கையின் ஆட்சியாளர்கள் உண்மைகளை மறுத்து உலகை ஏமாற்றும் போக்கைக் காட்டியுள்ள நிலையில், தற்போதும் காணாமல் போதல் ,சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன தொடர்ந்து 10 வருடத்திற்கு ஒருமுறை இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது வழமையாக உள்ளது இதனை விட இன்னும் கண்காணிப்பின் கீழேயே சிறுபான்மையினரை நடத்துவது இவ்வாறான நிலையில் இலங்கை மீது நம்பிக்கை இழந்திருப்பதுடன் ஒரு இறுக்கமான நிலையினை இலங்கை மீது கொண்டுள்ளதோடு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் இந்த ஒரு வருடத்திற்குள் இலங்கை ஏனைய உறுப்பு நாடுகளுக்கும் உறுதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியிருக்கின்றார்.
இவ்வாறாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கை அமைந்திருக்கும் நிலையில்
எமது அமைப்பால் கண்காணிப்பு செய்யப்பட பிரத்தியேகமாக சர்வதேச நிபுணத்துவம் மிக்கவர்களை உள்ளடக்கி அமைக்கப்பட்ட குழுவினுடைய அறிக்கைகளை முன்வைத்து அனைத்து நாட்டு பிரதிநிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் கலந்துரையாடவுள்ளோம்.
கேள்வி : அண்மையில் இலங்கையின் 70 வது சுதந்திரநாளன்று பிரித்தானியாவில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தீர்கள் அது தொடர்பாக ???
பதில்: நாங்கள் நான்கு அமைப்புக்கள் சேர்ந்து அன்றைய போராட்டத்தினை மேற்கொண்டிருந்தோம் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை நோக்கி இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையில் இருந்த பிரியங்கர பெர்னாண்டோ என்ற இராணுவ அதிகாரி எல்லோருடைய கழுத்தையும் அறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார். தொடர்ந்து அவருக்கெதிராக லண்டன் நகர காவல் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்திருந்தோம்.இதனைவிட அந்த அச்சுறுத்தும் காணொளியானது சமூக வலைத்தளத்தில் தீவிரமாக வைரல் ஆகியதுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவரை பதவியிலிருந்து நீக்கினாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இலங்கை ஜனாதிபதி மீளவும் அவரை பணிகளுக்கு அமர்த்தினார் . இதனைத்தொடர்ந்து நாங்கள் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து 09.02.2018 அன்று பிரிகேடியருக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை ஏற்படுத்தியிருந்தோம்.
கேள்வி : போர்குற்றவாளியான பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு எதிராக 09.02.2018 அன்று மேற்கொள்ளப்பட்ட கவயீர்ப்பு பேரணியின் விளைவுதான் என்ன?
பதில்: நாங்கள் பிரித்தானிய அரசிடம் அவருக்கான இராஜதந்திர பதவியை நீக்க செய்து அவரைக்கைது செய்து விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றவாறுதான் அமைந்திருந்தது. ஆனால் துரதிஷடவசமாக கடந்த வருடம் நடைபெற்ற ஐநா கூட்டத்தொடரில் இலங்கைக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா ஒரு சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்களோடு மட்டும் கலந்துரையாடிவிட்டு ஒரு போர்க்குற்றவாளியை இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பது மிகவும் வேதனைக்குரியது.
இவ்வாறாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினுடைய மனித உரிமைகளுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் மனித உரிமை ஆர்வலர் திரு பத்மநாபன் மணிவண்ணன் அவர்களின் பதில்கள் அமைந்திருந்தது.
யதுர்சன் சொர்ணலிங்கம்
லண்டன்