பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள திரிபடைந்த கோவிட் -19 வைரஸ்! கொழும்பு நகரில் அடையாளம் காணப்பட்ட முதல் நோயாளி

கொழும்பில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பின் குடியிருப்பாளர் ஒருவர், பிரித்தானியாவில் பரவி வரும் திரிபடைந்த கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதிய திரிபடைந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு நகரத்தில் கண்டறியப்பட்ட முதல் நபர் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவரின் முதல் மற்றும் இரண்டாவது தொடர்புகளை அடையாளம் காண அதிகாரிகள் தொடர்புத் தடத்தைத் தொடங்கியுள்ள நிலையில், குறித்த நபர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நோயாளியின் வீடு கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, பியகம, அவிசாவவை மற்றும் வவுனியா ஆகிய இடங்களிலிருந்தும் திரிபடைந்த கோவிட் -19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய மாறுபாடு பரவுவதால் எதிர்வரும் வாரங்களில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்,

இதனால் இரண்டு முகமூடிகளை அணியுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், புதிய மாறுபாடு பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.