துருக்கியில் கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்ட கணவன், அதன் பின்னர் அவரை தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரத்தில் 40 வயதான ஹக்கன் அய்சல் என்பவர் கைது செய்யப்பட்டார். துருக்கியின் முக்லா பகுதியில் அமைந்துள்ள பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கு என்ற பிரபலமான சுற்றுலா தலத்திலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
அய்சல் தமது மனைவி செம்ரா(32) என்பவரின் பேரில் எடுத்த காப்பீடு தொகையை சொந்தமாக்கவே, அவரை மலை முகட்டில் இருந்து தள்ளிவிட்டு கொன்றதாக தெரிய வந்துள்ளது.
2018 ஜூன் மாதம் நடந்த இச்சம்பவத்தில் 7 மாத கர்ப்பிணியான செம்ரா சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
காப்பீடு தொகையாக சுமார் 40,865 பவுண்டுகள் கிடைக்கும் என்பதாலையே, திட்டமிட்டு அய்சல் தமது கர்ப்பிணி மனைவியை கொலை செய்துள்ளதாக விசாரணையில் அம்பலமானது.
சுமார் 3 மணி நேரம் பயணப்பட்டு, கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டிற்கு வந்த அய்சல், சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அவரை தள்ளிவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, விபத்தில் தமது மனைவி இறந்ததாக கூறி காப்பீடு தொகைக்கு அய்சல் முயற்சி மேற்கொண்டுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்படவே, காப்பீடு நிறுவனம் தொகையை வழங்க மறுத்துள்ளது.
நீதிமன்ற விசாரணையில் தாம் கொலை செய்ததாக மறுத்துள்ள அய்சல், புகைப்படம் எடுப்பதில் நேர்ந்த சிறு வாக்குவாதத்தில் தமது மனைவி கால் தவறி பள்ளத்தில் விழுந்ததாக கூறியுள்ளார்.
நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துள்ளதுடன், முழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.