அவுஸ்திரேலியாவில் நீண்ட காலம் குடியுரிமைக்காக போராடிய இலங்கை தமிழ் அகதி குடும்பம்! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக அவுஸ்திரேலிய அரசு தாக்கல்செய்த மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பிரியா குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணியால் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீடொன்றும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இருதரப்பினரும் தத்தம் மேன்முறையீடுகளில் தோல்வியடைந்துள்ளதால் இவ்விவகாரம் முடிவின்றித் தொடர்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பிரியா குடும்பம் தொடர்பில் தீர்ப்பு வழங்கிய பெடரல் நீதிமன்ற நீதிபதி Mark Moshinsky, பிரியா-நடேஸ் தம்பதியினரின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பத்திற்கு procedural fairness- பரிசீலனை சார்ந்த நியாயத்தன்மை காண்பிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

அதேபோன்று குறித்த விவகாரத்தில் பிரியா குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சட்ட செலவீனங்களுக்கென 206,934 டொலர்களை அரசு வழங்கவேண்டுமெனவும் நீதிபதி Mark Moshinsky தெரிவித்திருந்தார்.

இதற்கெதிராக அவுஸ்திரேலிய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழு, நீதிபதி Mark Moshinsky-இன் தீர்ப்பு உறுதியானது என குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பிரியா குடும்பத்திற்கு சாதகமாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராகவும் அமைந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

ஆனால் பிரியாவும் நடேசும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வந்ததால் அவர்களுக்குப் பிறந்த தருணிகாவும் சட்டவிரோத குடியேறியாகவே பார்க்கப்படுவதாகவும் அவர் சார்பில் கடந்த செப்டம்பர் 2019இல் விண்ணப்பிக்கப்பட்ட SHEV- 5 வருட விசா விண்ணப்பம் செல்லுபடியற்றது (குடிவரவு அமைச்சர் விதிவிலக்கு அளிக்காதபட்சத்தில்) என வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக பிரியா குடும்பம் சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இது பிரியா குடும்பத்திற்கு பாதகமாகவும் அவுஸ்திரேலிய அரசுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அரன் மயில்வாகனம், சுமார் 3 ஆண்டுகளாக பிரியா-நடேஸ் குடும்பம் சட்டப்போராட்டத்தை மேற்கொண்டுவருவதால் அவுஸ்திரேலிய அரசு இனியும் தாமதிக்காமல் அவர்களை சமூகத்தில் வாழ அனுமதிக்க வேண்டுமென்பதே தமது கோரிக்கையென தெரிவித்தார்.

இதுஒருபுறமிருக்க பெடரல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு குறித்த அரசின் கருத்து என்ன என்பதுபற்றியும், பிரியா குடும்பம் தொடர்பில் அரசு என்ன முடிவை எடுக்கவிருக்கிறது என்பது தொடர்பிலும், தமக்கு பதில் வழங்குமாறு குறித்த குடும்பத்தின் சட்டத்தரணி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அரன் மயில்வாகனம் தெரிவித்தார்.

இதேவேளை அவுஸ்திரேலிய அரசும் பிரியா குடும்பமும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் தீர்ப்புக்கெதிராக உயர்நீதிமன்றம் செல்லவேண்டுமெனில் சிறப்பு அனுமதி பெற்றபின்னரே இச்சட்டப்போராட்டத்தை தொடரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.