சீனப் பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யும் நிலைமை எதிர்காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தனது இல்லத்தில் கட்சி உறுப்பினர்களை நேற்று முன் தினம் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டப்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சீனாவிடம் 1500 மில்லியன் டொலர்களை இலங்கை கோரிய போதிலும் 1500 யுவான்களை வழங்கவே சீனா முன்வந்துள்ளது.
சீன யுவான்களை இலங்கை பெற்றுக்கொண்டாலும் டொலரிலேயே மீள் செலுத்த வேண்டும்.இதன்போது திறைசேரியின் இருப்பு வீதம் அதிக புள்ளியில் காணப்பட்டாலும் அமெரிக்க டொலர்கள் அந்நிய செலாவணி இருப்பாக இலங்கையிடம் காணப்படாது.
இதனால் சீனப் பொருட்களை மாத்திரமே எமக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே தற்போதுள்ள சீன பொருட்களுக்கான கொள்வனவு கட்டுப்பாட்டை அகற்ற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.