சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் விடுதிக்கு சென்று பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்த சந்தேகநபர்

கொழும்பு – டேம் வீதியில் பயணப்பையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுடன் சந்தேகநபர் விடுதியொன்றுக்கு சென்று மறுதினம், பயணப்பையுடன் தனியாக வெளியில் வந்துள்ளமை சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், பயணப்பையில் சடலத்தை கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு சென்ற சந்தேகநபரும் கடந்த 28ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதியொன்றுக்கு செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

எனினும் மறுதினமான முதலாம் திகதி அந்த விடுதியில் இருந்து பயணப்பையுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றில் ஏறும் காட்சியும் கிடைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர், புத்தளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப பொலிஸ் பரிசோதகர் என தெரியவந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.