மட்டக்களப்பில் சூசகமான முறையில், வீட்டின் உரிமையாளரின் சாரம் ஒன்றை எடுத்து அணிந்துகொண்டு உரிமையாளர் போல பாசாங்கு காட்டி ஏழரைப் பவுண் நகை திருடனால் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொள்ளைச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள சுவிஸ் கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள , வீட்டின் அறையில் இரு பிள்ளைகளும் வரவேற்பு அறையில் தாயும் மற்றுமொரு பிள்ளையும் உறங்கியுள்ளனர். அத்துடன் வீட்டின் வெளிப்பகுதியில் வீட்டு உரிமையாளர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த வீட்டின் மலசல கூடத்தில் இருந்த சிறிய யன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்த திருடன், அங்கிருந்த வீட்டு உரிமையாளரின் சாரத்தை எடுத்து கட்டிக்கொண்டு அறையினுள் புகுந்துள்ளார்.
அப்போது சத்தம் கேட்டு கண்விழித்த வீட்டு உரிமையாளரின் மனைவி கணவர்தான் பிள்ளைகள் தூங்கும் அறைக்கு சென்றுள்ளார் என நினைத்து, என்ன அறையில் செய்கின்றீர்கள் எனக் கேட்டார். எனினும் பதில் எதுவும் சொல்லாத நிலையில், அங்கிருந்து சில நிமிடங்களின் பின்னர் சமையலறைப் பகுதிக்கு திருடன் சென்றுள்ளார்.
இதன்போது, படுக்கையில் இருந்து எழும்பிய வீட்டு உரிமையாளரின் மனைவி, மின்விளக்கைப் போட்டபோது சமையலறைப் பகுதிக் கதவினை திறந்துகொண்டு திருடன் போவதைக் கண்டுள்ளார்.
இதனையடுத்து வீட்டின் கதவைத் திறந்து வெளியில் பார்த்தபோது கணவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நிலையில், சந்தேகமடைந்த அவர் வீட்டினுள் சென்ற கைப்பையை எடுத்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த ஏழரைப் பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை அறிந்துகொண்டுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்