தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் கூறிய தகவல்கள்

கொழும்பு டேம் வீதியில் பயணப் பொதியிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சகோதரன் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகரான பிரபாத் ஜயவர்தன தனது சகோதரி காணாமல் போனமை குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

தனது சகோதரி கடந்த 28 ஆம் திகதி சிவனொளிபாதமலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போகும் வழியில் சத்திரங்களில் வௌ்ளையடிக்க இருப்பதாக சகோதரி தெரிவித்தார்.

அத்துடன் அன்னதானம் கொடுக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார்.

28 ஆம் திகதி நான் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தான் எரன்த பிரதேசத்தில் இருப்பதாகவும் கூறினார்”

தனது சகோதரி குறித்து கடந்த 2 ஆம் திகதி ஹங்வெல்ல காவல்துறையினரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அதன்போது சகோதரி தொடர்பாக விசாரித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எனது சகோதரியின் பை ஹங்வெல்ல காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதில் 2017 ஆம் ஆண்டு இளைஞர் படையணிக்காக தயாரிக்கப்பட்ட அடையாள அட்டையில் காணப்பட்ட தகவல்களின் ஊடாகவே காவல்துறையினர் என்னை தொடர்பு கொண்டதாக அவர் தெரிவித்தார்.

“குறித்த பை மற்றும் ஏனைய விடயங்கள் எனது தங்கையினுடையது என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக நான் இன்று கொழும்பிற்கு வருகின்றேன். அத்துடன் எனது தங்கை 1991 இல் பிறந்தவர். அவருக்கு இன்னமும் 30 வயது கூட பூர்த்தியாகவில்லை”

தனது சகோதரிக்கும் குறித்த காவல்துறை அதிகாரிக்கும் பேஸ்புக் மூலம் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.