லண்டனில் வாழும் இலங்கைத் தமிழரான ஒரு அழகிய இளம்பெண், ரிஷி சுனக்கின் பட்ஜெட்டுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
இலங்கையில் பிறந்தவரான அவரது பெயர் ரெபேக்கா சின்னராஜா (22). அவரை அழகிய இளம்பெண் என அழைக்கக் காரணம், அவர் மிஸ். இங்கிலாந்து அழகிப்போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.
லண்டன் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றும், மிகுந்த கடவுள் பக்தி கொண்டவரான ரெபேக்கா, ஒரு நடனக் கலைஞரும் ஆவார்.
தான் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றால், செவிலியர்களுக்காகவும், குழந்தைகளின் மன நலனுக்காகவும் குரல் கொடுப்பேன் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், பிரித்தானிய பட்ஜெட்டை சேன்ஸலரான ரிஷி சுனக் வெளியிட்டுள்ளார்.
அந்த பட்ஜெட்டில், செவிலியர்களின் ஊதியம் தொடர்பில் பிரயோஜனமான எந்த விடயமும் இல்லை என்பது தெரியவந்ததும், தான் முன்பு சொன்னதுபோலவே பட்ஜெட்டுக்கு எதிராக குரல்கொடுத்துள்ளார் ரெபேக்கா.
எங்கள் கடின உழைப்புக்கான பலன் இப்போதாவது கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன், குறிப்பாக, இந்த கொரோனா சூழலில் செவிலியர்கள் கடினமாக உழைத்தும், எப்போதும் போல் ஊதிய உயர்வு விடயத்தில் எங்களை கைவிட்டுவிட்டார்கள் என்கிறார் அவர்.
செவிலியர் என்பது என் தொழில், அதை நான் நேசிக்கிறேன், ஆனால் எங்களுக்கு இழைக்கப்பட்டது அநீதி, மக்கள் மருத்துவமனை ஊழியர்களுக்காக கை தட்டவேண்டும் என நான் விரும்பவில்லை, எங்களுக்கு நியாயமான ஊதியம் வேண்டும் என்கிறார் ரெபேக்கா.