‘‘நான் சின்ன வயசில ஸ்கூல்ல படிக்கக்க மத்ரஸாவுல சேர்ந்து மார்க்கக் கல்வியை படிக்கணும் என்டுதான் ஆசை. அதனால நானே மத்ரஸாவுல சேர்ரதுக்கு போம் எடுத்து அத என்ட கையாலேயே நிரப்பி மத்ரஸாவுல சேர்ந்தன்’’ என்று தனது மத்ரஸா கல்வி வாழ்க்கை பற்றிக் கதைக்க ஆரம்பித்தார் ஆஸிக் அஹமட்.
மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை எம்.பீ.சீ.எஸ்.குறுக்கு வீதி எனும் முகவரியில் வசித்து வருகிறார் ஆஸிக் அஹமட்.
சீனி முகம்மது முகம்மது முஸ்தபா, ஆதம் பாவா பெளசியா தம்பதிக்கு 2001 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் இவர்.
மார்க்கக் கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் வாழைச்சேனை – நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரியில் கல்வி கற்று வருகிறார்.
2017 ஆம் ஆண்டு தன்னுடைய இரண்டு கண்களும் திடீரென்று பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்துவரும் ஆஸிக் அஹமட், பார்வையிழந்த பின்னரான தனது அனுபவங்களை ‘சொல்ல மறந்த கதை’யுடன் இவ்வாறு பகிர்ந்து கொள்கின்றார்.
‘‘என்னை மத்ரஸாவில் சேர்ப்பதற்கு இன்ரவியூ செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். அதில நான் சிறந்த புள்ளிகளைப் பெற்று இரண்டாம் நிலை பெற்று தெரிவு செய்யப்பட்டன்.
அதைப்போலவே சேர்ந்த காலத்தில் இருந்து இன்றுவரைக்கும் மத்ரஸாவில் நான் அனைத்துப் பரீட்சைகளிலும் முதலாவது ஆளாகத்தான் வந்துகொண்டு இருக்கன்.
2017 ஆம் ஆண்டு 10 ஆம் மாதம் ஒருநாள் நான் வழக்கம்போல இரவில் தூங்கிட்டு மறுநாள் காலையில் எழும்பி கிதாபு வாசிக்கும் போது எனக்கு கண் பார்வை தெரியாம போயிட்டு. அதனால் கடும் கவலையும், அதிர்ச்சியும் அடைந்த நான் உடனேயே மட்டக்களப்பிலுள்ள ஹொஸ்பிடல் ஒன்றுக்குப் போய் கண்ணைக் காட்டினேன். அவங்க கண்ணை செக் பண்ணி பார்த்துட்டு கண்டி ஹொஸ்பிடலுக்கு போய் காட்டுங்க என்டாங்க.
நான் கண்டி ஹொஸ்பிடலுக்கு போய் அட்மிட் ஆகினன். அங்க கண்ணை செக் பண்ணிட்டு கண்ணுல எந்தப் பிரச்சினையும் இல்ல, கண்ணுல வார நரம்புலதான் பிரச்சினை இருக்கு என்டு சொன்னாங்க. அதற்கான வைத்தியத்தையும் நாங்க செஞ்சி வாரோம்.
மத்ரஸா கல்வியில எனக்கு சரியான விருப்பம். அதால கண் பார்வை எனக்கு இப்படி இருந்தாலும் என்னால மத்ரஸா கல்வியை விட்டுக் கொடுக்க முடியல. நான் மதரஸாவுக்கு தொடர்ந்தும் போயிட்டே இருக்கன்.
மத்ரஸாவுக்கு போன பிறகு அங்கு எனக்கு நல்ல ஒத்துழைப்புக்கள் கிடைச்சுச்சு. என்னுடைய கல்லூரி அதிபர் ஹபீப் ஒஸ்தாத் மற்றும் ஆசிரியர்கள் எனக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் என்னுடன் நடந்து கொண்டார்கள்.
நான் கண்பார்வை இழந்த ஆரம்பத்தில் கடும் கவலைப்பட்டேன். என்ட மற்ற நண்பர்கள் எல்லாம் ஓய்வு நேரங்களைக் கழிக்க அங்கும், இங்கும் ஓடித் திரிவார்கள். ஆனால் என்னால் முடியவில்லை என்று நான் அப்போது கடும் கவலைப்பட்டேன். ஒவ்வொரு நாளும் அதை நினைத்து நினைத்தே நான் கத்துவன்.
சந்தோசமாக இருக்கிற வயசுல நமக்கு இப்படி ஒரு சோதனை வந்துட்டே என்று நான் ஆரம்பத்தில் கடுமையாக கவலைப்பட்டேன்.
நான் உளவியல் ஆலோசனைகளைப் பெற்றேன். அதிலிருந்து நான் என்னில் சில மாற்றங்களை கொண்டு வந்தேன். என் கண்பார்வையை அல்லாஹ்தான் எடுத்தான். அதை அவனே தருவான் என்ற எண்ணம் எனக்கு வந்திச்சு.
யாருக்கு அல்லாஹ் கண் பார்வையை எடுத்து அதில் அவர்கள் பொறுமையாக இருக்கின்றார்களோ அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தை கொடுப்பான் என்ற இந்த ஹதீஸை படித்ததும் என் மனதுக்கு ஆறுதல் கிடைத்தது.
அதற்குப் பிறகு நான் கண் வருத்தத்தை நினைத்து கவலைப்படுவது கிடையாது. இப்போது நிறையப்பேர் வந்து கேட்பார்கள். என்ன ஆஸிக் முதல்மாதிரி கவலைகள் இல்லாமல் இப்ப சந்தோசமாக இருக்கிறீங்க, கண் பார்வை வந்துட்டா என்றெல்லாம் கேட்பார்கள்.
ஆரம்பத்தில் கடும் கவலைப்பட்டேன். அதனால் என்ட உடல் மெலிந்து ரொம்பவும் மோசமான நிலையில் இருந்துச்சு. ஆரம்பத்தில் என்ட கண்பார்வை தெரியாம நான் எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்பயும் இருக்கு. இருந்தும் நான் கவலைப்படல. நான் சந்தோசமாத்தான் இருக்கன்.
நான் கண்பார்வை இல்லாத போதுதான் 2018 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதினேன். அது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம். எனக்கென்று தனியான பரீட்சை அறை. அதில் ஒரு ஆசிரியர். கேள்விகளை வாசிக்கும்போது அதற்கான விடைகளை நான் சொல்லுவன். அதை இன்னொரு ஆசிரியர் எழுதிக் கொள்வார். அவை அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு சீடியுடன் எனது பேப்பர் செல்லும். இப்படித்தான் நான் ஒன்பது பாடங்களையும் எழுதினேன்.
அந்த எக்ஸாமில் நான் 3A, 1B, 4C, 1S, ரிஸல்ட்டை எடுத்தன். ஆனா நான் எடுக்குற ரிஸல்ட் இது இல்ல. எனக்கு கண்பார்வை இல்லாமல் போனதால்தான் இப்படி வந்து இருக்கி. இல்லாட்டி அல்லாஹ்ட உதவியால நான் எல்லாப் பாடத்திலும் ஒன்பது ஏ எடுத்து இருப்பன். அப்படிதான் ஆசிரியர்களும் என்ட குடும்பமும் எதிர்பார்த்து இருந்திச்சு.
நான் படிப்பதற்கு என்ட சகோதரி எனக்கு உதவி செய்வா. குறிப்பா ஓ.எல். டைமுல படிக்கக்க கேள்விகளை வாசிச்சி காட்டுவா. அத நான் கேட்டு படிப்பன். அதபோலதான் என்ட கல்லூரி ஆசிரியர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தாங்க.
உங்களிடம் இருந்து எடுத்ததை விட நாங்கள் சிறந்ததை உங்களுக்கு தருவோம் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். அந்த வசனம் உண்மையிலே எனக்கு நன்றாக பொருந்துகிறது. ஏனென்றால் எனக்கு பார்வை இழந்ததன் பிறகு கிரகித்தல் தன்மை அதிகரித்துள்ளது.
என்னை எல்லோரும் உற்சாகமூட்டுவார்கள். அதில் எனது கல்லூரியின் அதிபர் ஹபீப் முதீர் அவர்கள் அடிக்கடி சொல்லுவார், பார்வை இல்லாவிட்டாலும் உன்னிடம் ஞாபக சக்தி அதிகமாக இருக்கு அதனால குர்ஆனை பாடமாக்கு என்று சொல்லுவார்.
நான் அடிக்கடி ஹொஸ்பிட்டல் போறதால வகுப்பு பாடங்களில் இருப்பது குறைவு. ஆனா அல்லாஹ் எனக்கு தந்துள்ள ஆற்றல் மூலம் நான்தான் முதன்முதலில் வகுப்பில் கேள்விகளுக்கு விடை சொல்லும் ஆளாக இருப்பன்.
என்ட கண்பார்வையை எடுத்ததுக்குப் பிறகுதான் அல்லாஹ் இப்படியான ஆற்றல் ஒன்றை எனக்கு தந்து இருக்கான் என்று நான் உணர்கிறேன்.
உண்மையில் நான் கல்வியில் இப்படி இருப்பதற்கு முக்கிய காரணம் எனது குடும்பமும் நண்பர்களும்தான். எனக்கு கல்லூரியில் தங்கிப் படிப்பதற்கு முடியாத காரணத்தால் நான் வீட்டில் இருந்துதான் ஒவ்வொரு நாளும் கல்லூரிக்குச் சென்று படிப்பேன்.
நான் கல்லூரிக்கு போனதில் இருந்து வீடு வரும் வரைக்கும் எனது நண்பர்கள் எனக்கு பெரிதும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள். அதிலும் குறிப்பாக அம்ஜத் எனும் நண்பன் எப்போதுமே என் கூடவே இருந்து எனது அனைத்து விடயங்களையும் பார்த்துக் கொள்வார். என்ட சப்பாத்தைக் கூட அவரது கையால் எடுத்து போட்டு விடுவார்.
என்ட பார்வை சம்பந்தமாக நிறைய டொக்டர்மார்கிட்ட காட்டி இருக்கன். அவக ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கதைய சொல்றாங்க. எது எப்படி இருந்தாலும் அல்லாஹ் எனக்கு கண் பார்வையை தருவான் என்ற நம்பிக்கையில் தான் நான் இப்போதும் இருந்து கொண்டு இருக்கன்.
என்ட பிரார்த்தனை, எதிர்பார்ப்பு எல்லாம் ஏ.எல்.எக்ஸாமுக்கு முதல் எனக்கு கண்பார்வை வரணும் என்றுதான். நான் வார வருஷம் ஏ.எல். எக்ஸாம் எழுத இருக்கன். அதற்கு முதல் அல்லாஹ் எனக்கு நல்ல நிலைமையை தரனும் என்றுதான் நான் எல்லோரிடமும் துஆ கேட்குமாறு சொல்லி வாரன். இதை வாசிக்கிற எல்லாரும் எனக்கு திரும்ப பார்வை கிடைக்க துஆ செய்ங்க.
நான் பத்தாம் ஆண்டு படிக்கக்க ஊடகத்துறையில் ஆர்வம் வந்துச்சு. எனக்கு அறிவிப்பு துறையில் கடும் ஆர்வம். நான் மத்ரஸா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அறிவிப்பு செய்வன். என்னை எல்லோரும் பாராட்டி ஊக்கப்படுத்தினாங்க.
அதனால்தான் நான் இப்ப என்ட நண்பர்களின் ஒத்துழைப்புக்களுடன் பேஸ்புக், யூடியூப் பக்கங்களை உருவாக்கி அதில இஸ்லாமிய மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்கி வாரன்.
பொதுவாக போதைவஸ்து தொடர்பான நிகழ்ச்சிகள் பள்ளிவாசல்கள், பொது இடங்களில் நடக்கும். ஆனால் அதனை கேட்க போதை பாவனையாளர்கள் வரமாட்டார்கள். அவர்கள் பேஸ்புக், யூடியூப் பாவனையாளர்களாக இருப்பார்கள். அதனால் போதைவஸ்து தொடர்பான விழிப்புணர்வுகளை பேஸ்புக், யூடியூப் பக்கங்களில் போடும்போது அதனை அவர்கள் பார்த்து திருந்தும் வாய்ப்புகள் இருக்கும். அதனால்தான் நான் சமூக வலைத்தளங்களை நண்பர்களின் உதவியுடன் இயக்கி விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை வழங்கி வாரன்.
நான் கண்பார்வை இழந்துள்ளதால் அதிகமாக வீட்டில்தான் இருப்பன். அதனால அமல் செய்வதற்கு அதிக நேரம் கிடைக்கும். அதனால் நான் ஒலிப்பதிவுகளை கேட்டு குர்ஆனை மனனம் செய்து வாரன். கண்பார்வை இழந்த நாள் முதல் இன்றுவரை இரண்டு ஜுஸ்உ குர்ஆனை மனனம் செய்துள்ளன்.
என்ட ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் நான் ஒரு மெளலவியாக வெளியாகி மக்கள் மத்தியில் தூய இஸ்லாத்தை எத்தி வைக்க வேண்டும் என்பதுதான்.
உண்மையிலே எங்க வாப்பாட உதவிய என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. அவர் கஷ்டமான சூழ்நிலையில் விவசாயம் செய்து வரும் நிலையில கூட என்னை மிகவும் நல்ல முறையில் பார்த்து வாறார். எனக்காக கஷ்டப்படுகிறார். வறுமையான நிலை என்ட போதும் கஷ்டத்தை என்னிடம் காட்டிக் கொள்ளாம எனது வருத்தத்துக்கு நிறைய செலவு செய்கிறார் என்பதை என்னால உணர முடிகிறது.
எனக்காக நிறையப்பேர் கஷ்டப்பட்டு இருக்காங்க. அதற்காக நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒரு ஆட்டோ மூன்று சக்கரத்தோட ஓடுவது போலான் என்ட வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கு. அவக யாரென்றால் என்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள். அவங்கட ஒத்துழைப்புக்களையும் அரவணைப்புக்களையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது’’ என்று தனது அனுபவத்தை எம்மிடம் பகிர்ந்து கொண்டார் ஆஸிக் அஹமட்.
ஆஸிக் அஹமடின் வாழ்க்கையில் நமக்கு நிறையப் படிப்பினைகள் இருக்கின்றன. கண் பார்வை எனும் இறையருள் எவ்வளவு மேலானது என்பதை ஆஸிக்கின் கதை நமக்கு உணர்த்தியிருக்கிறது. அதற்காக நாம் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதுடன் சகோதரர் ஆஸிக் அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க பிரார்த்திப்போமாக.