திருவனந்தபுரம் அருகே மேற்கு வங்க தொழிலாளிக்கு லாட்டரியில் பம்பர் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வருகின்றார்.
இவரது குடும்பத்தினர் மேற்கு வங்கத்திலேயே இருந்த நிலையில், வறுமை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து பிரதீபா மட்டும் கேரளாவில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
பிரதீபா மண்டலுக்கு லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரள அரசின் காருண்ய பாக்கியகுறி லாட்டரி வாங்கினார். அதில் அவருக்கு பம்பர் பரிசான ரூ.80 லட்சம் விழுந்துள்ளது.
இதனையறிந்த பிரதீபா மண்டல் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்த நிலையில், பயமும் ஏற்பட்டுள்ளது. லட்சக்கான பணத்தினை யாராவது பறித்துச்சென்று விடுவார்கள் என்று கருதிய அவர், பூஜப்புரா காவல் நிலையத்திற்கு சென்று தனக்கும், தனக்கு பரிசு விழுந்த லாட்டரி சீட்டுக்கும் பாதுகாப்பு வழங்க கேட்டுள்ளார்.
பின்பு பொலிசார் விசாரித்ததில் பிரதீபாவிற்கு ரூ.80லட்சம் லாட்டரி விழுந்துள்ளது என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து பிரதீபா மண்டலுக்கு விழுந்த லாட்டரி சீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் பிரதீபா மண்டலுக்கு நிரந்தரமாக வீடு இல்லாததால் முகவரி எதுவும் இல்லை. வங்கியில் சேமிப்பு கணக்கும் இல்லை. இதனால் அவருக்கு விழுந்த பரிசுத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதுபற்றி வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் பிரதீபா மண்டலுக்கு தற்காலிகமாக ஒரு முகவரியில் வங்கியில் கணக்குதொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவருக்கு வங்கியில் இன்று புதிதாக கணக்கு தொடங்கப்படுகிறது. பிரதீபா மண்டலுக்கு விழுந்த லாட்டரி சீட்டையும், அவரையும் பொலிசார் தங்களது வாகனத்தில் பாதுகாப்புடன் வங்கிக்கு அழைத்து சென்றனர்.
பின்பு அவரது லாட்டரி சீட்டு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. லாட்டரியில் ரூ.80 லட்சம் விழுந்தது குறித்து பிரதீபா மண்டல் கூறுகையில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பரிசு விழுந்த லாட்டரி சீட்டை யாராவது பறித்துச்சென்று விடுவார்கள் என்று கருதியதால் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டேன்.
அவர்களின் பாதுகாப்புடன் பரிசுத் தொகையை வங்கிக்கு கொண்டு சென்றேன். இந்த பரிசுத் தொகையில் புதிய வீடு கட்டுவேன். புதிய கார் வாங்குவேன் என்று கூறியுள்ளார்.