கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு “பாரிஜாத வனம், தருவனம், கற்பகவனம்” என்ற புராணப்பெயர்கள் உண்டு.
இத்தல இறைவன் “களர்முளை நாதேஸ்வரர்” என அழைக்கப்படுகிறார், 80 அடி உயர ராஜ கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர்.
பிரகாரத்தில் வலம்புரி விநாயகர், விஸ்வநாதர், கஜலட்சுமி, அகத்தியர், நாயன்மார்கள், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், துர்க்கை, லட்சுமி, சண்டிகேஸ்வரர் உள்ளனர்.
அஷ்டபுஜ துர்க்கை சிம்மத்தின் மீது அமர்ந்த கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறாள். அகோர வீரபத்திரர் தனி சன்னதியில் மேற்கு முகமாக வீற்றிருக்கிறார்.
சிதம்பரம், பேரூரில் ஆனந்த தாண்டவம், திருவாரூரில் அஜபா தாண்டவம், மதுரையில் ஞான சுந்தர தாண்டவம், அவினாசியில் ஊர்த்துவ தாண்டவம், திருமுருகன் பூண்டியில் பிரம்ம தாண்டவம் தந்தருளிய சிவபெருமான் இத்தலத்தில் பிரம தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.