கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இளம் மருத்துவர் மரணம்! திருமணமான 3 மாதத்தில் நடந்த சோகம்

தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறையில் எம்.டி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் ஹரிணி (வயது 26). கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஹரிணி கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார், வீட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்ட நிலையில் வலி நிவாரணி ஊசி எடுத்துக்கொண்டுள்ளார்.

இதில் அவரது உடல்நிலை மேலும் மோசமடைய உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் அவருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் தான் ஆவதால் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.