மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது அன்னை அம்பிகையின் அறப்போர்!

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்த அகிம்சைவழி உண்ணாவிரதப்போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.

ஒன்றுக்கு மேற்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பிரித்தானியாவில் நேற்று கிளர்ந்தெழுந்த புலம்பெயர் தமிழர்களின் வேண்டுதலாகவும் உலகெமெங்குமுள்ள ஒட்டுமொத்த தமிழினத்தினதும் அமைப்புக்கள் கட்சிகளினதும் வேண்டுகோளையும் ஏற்று அம்பிகையின் உண்ணாவிரதப்போராட்டம் இன்றுடன் (15.03.2021) முடிவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.

பிரித்தானிய அரசிடம் 4 அம்சக்கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவேன் என இன்றுடன் 17 நாட்கள் பசித்திருந்த அம்பிகை கோரிக்கைகளில் ஒன்று முழுமையாகவும் இன்னொன்று அண்ணளவாகவும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலேயே வெற்றியுடன் உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளுமாறு பிரித்தானிய அரசாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அனைத்து தமிழ் மக்களாலும் கேட்கப்பட்டுள்ளார்.

அம்பிகை முன்வைத்த அனைத்துலக சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்குதல்(IIIM), அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) விசாரித்தல், சிறிலங்காவுக்கான தனியான அறிக்கையாளரை நியமித்தல் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் கருத்து கணிப்பு வாக்கெடுப்புக்கான ஐ.நா வின் பரிந்துரைத்தல் ஆகிய நான்கு அம்சக்கோரிக்கைகளில் பிரித்தானியாவின் ஐ.நா.வுக்கான இறுதி வரைபில் ஒரு புதிய விதமான அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்று (IIM இன் முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய) உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிரந்த ஐநா கண்காணிப்பளருக்கு பதிலாக, தொடர்ச்சியாண கண்காணிப்பு நடைமுறை ஓன்றும் உருவாக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே, திருமதி அம்பிகை செல்வக்குமார் மாபெரும் வெற்றியுடன் இன்று பிரித்தானிய நேரம் பி.ப. 3.00 -5.00 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை, மத தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் முடித்துக்கொள்ள உள்ளார். இது நீண்டதொரு தமிழின போராட்ட வரலாற்றில் அகிம்சைவழி மாபெரும் வெற்றியாகும்.

ஓட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றைக்குரலாய் அம்பிகை முன்னெடுத்த அறப்போராட்டத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும். அம்பிகையின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றுமாறு நேற்று பிரித்தானியாவில் மாபெரும் பேரணியை நிகழ்த்திய புலம்பெயர் தமிழர்களுக்கும் உலகெங்கும் அவருக்காக குரல் கொடுத்த தமிழினத்தின் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதப்படுகின்றது.

நிகழ்வினை இன்று மாலை இலண்டன் நேரம் 3.00 -5.00 மணிவரை நேரலையாக பின்வரும் இணைப்பில் மெய்நிகர் வழியாக உலெகெங்கும் உள்ள அனைவரும் பார்வையிட்டு அம்பிகைக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கமுடியும்.

https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09மும்மத தலைவர்களின் ஆசியுரைகளுடன் ஆரம்பமாகவுள்ள குறித்த மெய்நிகர் நிகழ்வில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பன்னாட்டு அரசியல் பிரமுகர்களின் சிறப்புரைகளும் அம்பிகை செல்வக்குமாரின் வெற்றியுரையம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, நேற்று அம்பிகைசெல்வக்குமாரின் கோரிக்கையை நிறைவேற்றி அவரை காப்பாற்றக்கோரி அவரது போராட்டத்தளத்தின் முன் ஒன்றுதிரண்ட புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வழமைபோல் நடைபெறும் அம்பிகையின் ஆதரவு மெய்நிகர் நிகழ்ச்சியிலும் அம்பிகையின் போராட்டம் வெற்றிப்பாதையை அடைந்துள்ளது எனவே போராட்டத்தை நிறைவு செய்யுங்கள் என்ற கோரிக்கைகளுமே வலுப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நேற்று பி.ப. 3 மணிக்கு ஆரம்பமான மெய்நிகர் நிகழ்வில் Earling ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சிறப்பு பூஜை ஒளிபரப்பப்பட்டதுடன் Enfield நாகபூசணி அம்மன் ஆலய குருக்கள் கமலநாதன் அமெரிக்காவிலிருந்து அருட்தந்தை றொகான் டொமினிக் மற்றும் தமிழகத்திலிருந்து ஷாகுல் ஹமித்த்தின் புதல்வி பாத்திமா பஹானா ஆகியோரின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி அவர்களின் ஆதரவு அறிக்கை தொடர்பான கண்ணோட்டமும் தாயகத்திலிருந்து தமிழர் மரபுரிமை பேரவையின் தலைவர் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், அனைத்துலக மக்களவை சார்பில் கோபாலபிள்ளை ஜெயசங்கர், ஜேர்மனியிலிருந்து வழக்கறிஞர் மாற்றி தேவதாஸ், திருமதி வாசுகி சுதாகர்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – மகளிரணிப் பொறுப்பாளர், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோரின் சிறப்புரைகளும் இடம்பெற்றன.

அத்துடன் ஈழ பாரதி எனும் ஈழக்கவிஞர் யூட் நிக்சன் எட்வேட்டின் கவிதையும் சிறப்புப் பாடல்களும் கனடாவிலிருந்து சிறப்பு நடனம் இடம்பெற்றிருந்தன

17 ஆவதும் இறுதி நாளுமாகிய இன்றைய மெய்நிகர் நிகழ்வு வழமை போல் பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்நிகழ்வில் நீங்களும் இணைந்து அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்க பின்வரும் இணைப்பில் இணைந்துகொள்ளலாம். https://us02web.zoom.us/j/86153063444?pwd=U1ZiY1lIVjRtZmNwZUFWNGNzV1k1UT09