விடுதலைப்புலிகளின் தலைவர் பட விவகாரம்; ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் கடுமையான வாதம்

கடந்த வருடம் நவம்பர் 26 ஆம் திகதியன்று விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தையொட்டி அவருடைய புகைப்படத்தையும் , செய்தியையும் வெளியிட்டதாகக் கூறி, யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து, உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் மற்றும் ஆசிரிய பீடப் பிரதிநிதி ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களின் அடிப்படையிலேயே இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

உதயன் பத்திரிகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஒளிப்படத்துடன் அவரது பிறந்த நாளன்று செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி தொடர்பில் யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் முறைப்பாட்டுக்கு அமைவாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் சந்தேகநபர்களாகப் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈஸ்வரபாதம் சரவணபவன் மற்றும் ஆசிரிய பீடப் பிரதிநிதி கு.டிலீப் அமுதன் ஆகியோர் பெயரிடப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணிகளான ஆனோல்ட் பிரியந்தன், சலோசியஸ், கணாதீபன் ஆகியோரும், உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடப் பிரதிநிதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.திருக்குமரன், ரிசிகேசன் ஆகியோரும் முன்னிலையாகினர்.

இதேவேளை மாவீரர் நாளுக்கு எதிரான கட்டளையை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ’பி’ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ’பி’ அறிக்கையில் ஏற்கனவே கட்டளை வழங்கப்பட்டிருந்தது என்றும் அந்தக் கட்டளையை மீறியதுடன் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உருவப்படத்தையும் செய்தியையும் வெளியிட்டதாகவும், அந்த செய்தி இனங்களுக்கு இடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அறிக்கையைத் தாக்கல் செய்தபோது அதில் முறைப்பாட்டாளராக யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோவும், சிறுகுற்றப் பிரிவைச் சேர்ந்த பொறுப்பதிகாரி விசாரணையாளராகவும் குறிப்பிடப்பட்டு, நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்னர் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி இறுதியாகச் சமர்ப்பிக்கப்பட்ட மேலதிக அறிக்கையில் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன், உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடப் பிரதிநிதி கு.டிலீப் அமுதன் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாகவும், அவர்களை முதலாவது, இரண்டாவது சந்தேக நபர்களாகப் பெயர் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஜனவரி 19 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த விசாரணை, மார்ச் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்போது சந்தேகநபர்கள் இருவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விட்டதாகவும், எனவே வழக்குக் கோவையை சட்டமா அதிபரிடம் ஆலோசனைக்காக அனுப்பி வைத்து ,அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள கால அவகாசத்தை வழங்குமாரும் பொலிஸார் மன்றில் கோரினர்.

இதன்போது மன்றில் தனது தரப்பு வாதங்களை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா முன்வைத்தார்.

அதில், “எனது சேவை பெறுநரை சந்தேகநபர் என்று குறிப்பிட்டிருப்பதை முற்றாக மறுதலிக்கின்றேன். இந்த வழக்குத் தொடர்பில் பூர்வாங்க ஆட்சேபனைகளை முன்வைக்கின்றேன்.

இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த முடியாது.’ பி ’அறிக்கையைத் தாக்கல் செய்த பொலிஸார் அந்த முதலறிக்கையில் குற்றவியல் சட்டக்கோவையின் விதிகளுக்கு அமைவாகத் தாக்கல் செய்யாது, விதிகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளனர்.

உதாரணமாக பிணை வழங்கப்படாத ஒரு குற்றத்தைப் புரிந்திருந்தால், கலகம் ஏற்படக்கூடிய குற்றத்தைப் புரிந்திருந்தால் பொலிஸ் பொறுப்பதிகாரி உடனடியாக அதை நீதிவானுக்குத் தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அப்படியான அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் அவர் தனது மேலதிகாரிக்கு அந்த விடயத்தைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். மேலதிகாரியால் நியமிக்கப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இந்த விடயத்தில் 109ஆவது சட்டக் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயத்தைப் புறந்தள்ளி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனக்குக் கீழே பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு இந்த வழக்கை முறைப்பாடு செய்திருக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டானது தண்டனைச் சட்டக் கோவை 6ஆம் பிரிவுக்குக் கீழே வருகின்றது.

அந்தப் பிரிவுக்கு கீழே வரும் குற்றச்சாட்டு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அரசுக்கு எதிரான குற்றம். இது ஒரு பாரதூரமான பிணை வழங்க முடியாத குற்றம். ஆனால் பொறுப்பதிகாரி நீதிவானுக்கும் அறிக்கை சமர்ப்பிக்காமல், மேலதிகாரிக்கும் அறிக்கை சமர்ப்பிக்காமல் தனக்குக் கீழ் பணியாற்றும் கீழ் நிலை அதிகாரிக்கு முறைப்பாட்டைச் செய்திருக்கின்றார். இது மிகவும் தவாறனது என சுட்டிக்காட்டினார்.

விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிப்பவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று 113வது பிரிவு சொல்கின்றது. ஆனால் இங்கு நிலையப் பொறுப்பதிகாரிதான் முறைப்பாட்டாளர். முறைப்பாட்டாளருக்கே விசாரணை அறிக்கையைக் கொடுக்க முடியுமா?. இங்கே ஒரு பெரும் முரண்பாடு ஏற்படுகின்றது. அதேநேரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி செய்த முறைப்பாடு தொடர்பான எந்த அறிக்கையும் இங்கு சமர்ப்பிக்கப்படவில்லை.

இவற்றின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நீதிமன்று விடுவிக்க வேண்டும்.

தற்போது முதலாவது சந்தேகநபர், இரண்டாவது சந்தேகநபர் என்று குறிப்பிட்டு சட்டமா அதிபர் திணைக்கள ஆலோசனைக்காக அறிக்கை அனுப்பப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றேன்.

விசாரணைகள் நடத்தப்பட்டு, அந்த விசாரணை அறிக்கைகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டு, இனங்களுக்கு இடையிலான முரண்பாடு ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்குச் சட்டமா அதிபர் வரும்வரையில் பொலிஸார் அறிக்கை சமர்ப்பிக்க முடியாது. ”குற்றம் நடைபெற்றிருக்கிறது, அவர்களிடம் வாக்குமூலம் பெற்று அவர்களைச் சந்தேகநபர்களாக்கி நீதிமன்றில் தோன்றும்படி” சட்டமா அதிபர் கூற வேண்டும். ஆனால் அவ்வாறு அவர் கூறுவதற்கு முன்னரே பொலிஸார் முறைதவறி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

சட்டக்கோவை பிரிவு 120இல் இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் எழுத்து மூலமான ஆவணம் இல்லாது வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு சட்டமா அதிபரின் எழுத்து மூலமான அங்கீகாரம் இல்லை என்பதையும் நீதிமன்று கவனத்தில் எடுக்க வேண்டும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் படம் மற்றும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தில் எந்தவிதமான இனமுரண்பாடும் இல்லை. இந்த விடயம் உதயன் பத்திரிகையில் மட்டும் வெளியாகவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்றன வலம்புரிப் பத்திரிகை, காலைக்கதிர் பத்திரிகை என்பனவும் அதே தினத்தில் படங்களுடன் செய்திகள் பிரசுரித்திருக்கின்றன. தெற்கில் இருந்து வெளிவரும் லங்காதீப பத்திரிகை, டெய்லி மிரர் என்பவற்றிலும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படம் வெளியாகியிருந்தது.

ஆனால் ஒருவருக்கு எதிராக மட்டுமே தனிப்பட்ட குரோதம் காரணமாக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த ஆறு பத்திரிகைகளும் தங்களுடைய தார்மீகக் கடமையைத்தான் செய்திருக்கின்றன. அரசினுடைய முடிவு என்ன என்பதை – அரசுடைய நிலைப்பாட்டை மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டியது பத்திரிகைகளுடைய கடமை. அவ்வாறு செயற்பட்ட பத்திரிகைக் எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பது தனிப்பட்ட குரோதமே காரணம்.

இந்தத் தனிப்பட்ட குரோதத்துக்கு உதயன் பத்திரிகையில் வெளிவந்த அறிக்கை ஒன்றே காரணம். பெண் ஒருவரின் முறைப்பாட்டை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாரம் எடுக்காமையால் அந்தப் பெண் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்தார் என அதில் குறிப்பிட்டிருந்தது. அந்தச் செய்தியால் தனது பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 4ஆம் திகதி உதயனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை நீதிமன்று கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.ரி.தவராஜா தனது வாதத்தை முன்வைத்தார்.

இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தன் வாதங்களை முன்வைக்கையில்,

“நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் எழுத்திலான சட்டம் கிடையாது. அது ஆங்கிலேயப் பொதுச் சட்டம். இவ்வாறானதொரு நிலையில் எந்த நீதிமன்றுக்கு எவ்வாறான நியாயாதிக்கம் இருக்கின்றது என்று சொல்கின்ற சட்டப் பிரிவைக் குறிப்பிட்டு இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அது சட்டபூர்வமற்றது. ஏனெனில் தவறு என்ன விதமானது எங்கே வரையறுக்கப்பட்டிருக்கின்றது என்பது சொல்லப்படவேண்டும். எழுத்திலான சட்டம் இல்லை என்றால் அதனைச் சொல்ல முடியாது. அடிப்படையிலேயே இந்த வழக்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருக்க முடியாது. எனவே நிராகரிக்கப்பட வேண்டும். அத்துடன் தண்டனைச் சட்டக் கோவையின் 120 ஆவது பிரிவின் கீழே சட்டமா அதிபரின் முதல் அனுமதியில்லாமல் வழக்குத் தொடர்ந்திருக்க முடியாது. ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் வாதத்துடன் எனது வாதத்தையும் முன்வைக்கிறேன்.

அடிப்படையற்ற வழக்கு என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நிறைவுறுத்தப்பட வேண்டும். குற்றவியல் சட்டநடவடிக்கை கோவையின் 133ஆவது பிரிவின் கீழ் நீதிவான் ஒருவருக்கு சந்தேகம் எழுந்தால் மாத்திரம்தான் அவர் சட்டமா அதிபருக்கு பாரப்படுத்த முடியுமே தவிர, பொலிஸாருக்கு ஏற்படுகின்ற எல்லா சந்தேகங்களுக்கும் நீதிமன்றத்திலே இருந்து சட்டமா அதிபருக்கு அனுப்ப முடியாது, என்று அவர் தனது வாதத்தை முன்வைத்தார்.

இந்த வாதங்களின் அடிப்படையில் பொலிஸாரிடம் நீதிவான் சில விடயங்களை வினவியதுடன், இறுதியில் ”இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக விசாரணை செய்வதானால் செய்யலாம். ஆனால் உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஈ.சரவணபவன் மற்றும் உதயன் ஆசிரிய பீடப் பிரதிநிதி கு.டிலீப்அமுதன் ஆகியோர் சந்தேகநபர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டதிலிருந்து விடுவிக்கப்படுகின்றார்கள் என கூறினார்.

அதோடு வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டால் இருவரும் முன்னிலையாகவேண்டும் என்றும், வழக்கு வரும் ஜூலை மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றதாகவும் யாழ் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.