கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தென்னிலங்கை ஊடகவியலாளர் ஊடகங்கள் முன் அம்பலப்படுத்திய விடயங்கள்!

தென்னிலங்கையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் பொலிஸாரின் அச்சுறுத்தல்கள் மற்றும் பல விடயங்களை ஊடகங்களுக்கு முன்பாக இன்றைய தினம் அம்பலப்படுத்தியுள்ளார்.

தன்னை கடத்தியவர்கள் மற்றும் அதற்குப் பின்னால் செயற்பட்டவர்கள், கடத்தப்பட்டமைக்கான காரணம் என்பவற்றை நீதிமன்றில் தெரிவிக்கப்போவதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தென்னிலங்கையில் கடந்த 10ஆம் திகதி இனந்தெரியாத குழுவொன்றினால் கடத்தப்பட்ட சியரட்ட சிங்கள ஊடகத்தின் ஸ்தாபகரான சுஜீவ கமகே, தாக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியிலிருந்து மீட்கப்பட்டார்.

கொழும்பில் இன்று பகல் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன விசேட ஊடக சந்திப்பை நடத்தியிருந்ததோடு, ஊடகவியலாளர் சுஜீவ கமகே ஒரு நாடகத்தையே அரங்கேற்றியிருப்பதாகவும், தன்னைத்தானே நெருப்பில் சுடப்பட்ட சீமெந்து கரண்டியால் சுட்டுக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சீமெந்து கரண்டி ஒன்றையும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு முன்பாகக் காண்பித்தார்.

இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 18ஆவது இலக்க நோயாளர் அறையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரத்தின் பின்னர் வீடு திரும்பிய ஊடகவியலாளர் சுஜீவ கமகே, இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பையும் நடத்தினார்.

சமூக நீதிக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பொலிஸார் கூறுவது அத்தனையும் உண்மைக்குப் புறம்பானது என்று கூறினார்.

இது தொடர்பில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 10ஆம் திகதி தாக்கப்பட்டு தொடர்ந்து 7 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நாளில் எனது மனைவியிடம் பொலிஸார் 03 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் என்னிடமும் ஒருமணிநேரம் விசாரணையை தெமட்டகொட பொலிஸார் நடத்தினர்.

அதன் பின்னர் அதிகாலை 2.30 வரை எனது மனைவியிடம் பொலிஸார் விசாரித்தனர். ஊடகங்களுக்கும் பேசவேண்டாம் என்றும் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டது. எனது உடலில் காயங்களுக்காக மருந்து இடப்பட்டுள்ள பட்டிகளையும் கழற்றச் சொன்னார்கள். எனக்கு வந்த அழுத்தங்கள் காரணமாக நான் பொலிஸாரிடத்திலிருந்து வெளியேற அனைத்தையும் கூறினேன்.

இந்த நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன கூறுகின்ற விடயங்களை நான் நிராகரிக்கின்றேன். அவர் காண்பித்த சீமெந்துக் கரண்டி என்னுடையதல்ல. எனது குழந்தையையும், மனைவியையும் வெட்டிக் கொலை செய்வதாக என்னை கடத்தியவர்கள் மிரட்டினார்கள்.

ஆகவேதான் எனது நண்பர்கள், நெருங்கியவர்களான ராஜிதசேனாரத்ன, தயாசிறி, கரு ஜயசூரிய உள்ளிட்டவர்களிடம் சென்று பேசினேன். அதன் பின்னர் வெளிநாட்டுத் தூதரகமொன்றுக்கு அருகே சென்று சிறிதுநேரத்தின் பின் வைத்தியசாலைக்கு சென்றேன்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ, ரணில், சந்திரிகா அரசாங்கங்களின்போது நான் பல அடிகளைத் தாங்கினேன். வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லாத ஒரேயொரு ஊடகவியலாளன் நான்தான். என்னிடம் குறிப்பிட்ட நபர் சார்ந்த குரல் பதிவு அடங்கிய தரவுப்பொதி இருந்தது.

அதனைப் பெற்றுக்கொள்ளவே என்னைக் கடத்தினார்கள். என்னை கடத்தியோர் மற்றும் அதற்குப் பின்னால் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நீதிமன்றத்தில் நான் பகிரங்கப்படுத்துவேன் எனவும் தெரிவித்தார்.