ஐக்கிய நாடுகள் சபை உலக மகிழ்ச்சி அறிக்கை 2021-ஐ வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா உலக மகிழ்ச்சி அறிக்கை 2021-ன் படி, உலகளாவிய தொற்றுநோய்களின் பேரழிவு விளைவுகளை மீறி உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்த புதிய அறிக்கை மக்களின் வாழ்வில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது.
கண்டுபிடிப்புகளின்படி, தொற்றுநோயை எதிர்கொள்வதில் அதிக அளவு மகிழ்ச்சியைத் தக்கவைக்க மிகவும் முக்கிய காரணிகள், மக்கள் ஒருவருக்கொருவர் மீது வைத்துள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையே என தெரியவந்துள்ளது.
ஆச்சரியப்படும் விதமாக, சராசரியாக மக்கள் தங்கள் வாழ்வில் பாதிப்பில்லை என தெரிவித்துள்ளதாக அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான John Helliwell கூறினார்.
மக்கள் கொரோனாவை ஒரு பொதுவான, வெளிப்புற அச்சுறுத்தலாக அனைவரையும் பாதிப்பதாக பார்த்தனர், மேலும் இது மக்களிடையே ஒற்றுமை மற்றும் சக உணர்வை அதிக அளவில் உருவாக்கியுள்ளது என John Helliwell விளக்கமளித்துள்ளார்.
கணக்கெடுப்பு தரவுகளின்படி, உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியிலில் போட்டியாளர்களை விட நூறு புள்ளிகள் முன்னிலையுடன் பின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐஸ்லாந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளன.
அமெரிக்கா 14வது இடத்தையும், கனடா (15), பிரித்தானியா (18), பிரான்ஸ் (20), ஜப்பான் (40), சீனா (52), ரஷ்யா (60), ஈரான் (77), இந்தியா (92)வது இடத்தை பிடித்துள்ளன.
2012 முதல் ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக மகிழ்ச்சி அறிக்கை, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவின் நிலை, ஆயுட்காலம், சிவில் உரிமைகள் கடைபிடிக்கப்படுதல், வேலை பாதுகாப்பு, ஊழலின் நிலை மற்றும் பொது கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் போன்ற அளவீடுகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.