இலங்கையின் பிரித்தானியாவுக்கான லண்டன் தூதுரக முன்னாள் பிரதானி மேஜர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று இரத்து செய்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டு இலண்டனில் போராட்டம் நடத்தியிருந்த தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக பிரியங்க பெர்னாண்டோ சைகை மூலம் காட்டியிருந்தமை உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பிரியங்க பெர்னாண்டோவை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது.
அத்துடன், அவருக்கு 2400 பவுண்ஸ் அபராதமும் விதிக்கப்பட்டது. குறித்த அபராத தொகையை பிரியங்க பெர்னாண்டோ செலுத்தாத நிலையில் அவரை உடனடியாக கைதுசெய்யுமாறு மேற்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும் அவரை கைதுசெய்யமுடியாது என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவை நீதிமன்றம் வழங்கியது.