இன்று கலை இலங்கையை உலுக்கிய கோர விபத்தில் ஆசிரியர் ஒருவரும் புகைப்பட கலைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியரும் லுணுகலை இராமகிருஷ்ணா மகா வித்தியாலய முன்னாள் மாணவனுமான பெருமாள் முரளிதரன் என்பவர் உயிரிழந்துள்ளதுடன் டேனி எனும் புகைப்படக் கலைஞரும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று காலை பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில் உயிரிழந்த இருவர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு 200 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 6 பெண்களும் அடங்குகின்றனர்.
அத்துடன் பதுளை மாகாண வைத்தியசாலையில் 16 ஆண்களும், 14 பெண்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 9பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 2அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக விசேட வைத்திய குழுக்களும், சுகாதார குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்காக 8அம்பியூலன்ஸ் வண்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சீசி டிவி காட்சிகளின் படி எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனத்தை தாண்டி செல்ல முற்பட்ட வேளையிலே பஸ் வண்டி வீதியை விட்டு விலகி 200அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் விபத்தில் பஸ்ஸின் சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டும் நிலையில் பசறை பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.