உயிரிழந்த களுவாஞ்சிக்குடி சிறுமி அஸ்வினி தொடர்பில் வெளியான பகீர் தகவல்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பெரியகல்லாறில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெரியகல்லாறு கிராமத்தை சேர்ந்த எஸ்.அஸ்வினி எனும் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தநிலையில் சிறுமியின் உடலில் துன்புறுத்தலுக்கான காயங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் கூறினர்.

சிறுமியின் தாய் மலேசியாவில் பணிபுரிந்துவரும் நிலையில் சிறியதாயிடம் சிறுமியை ஒப்படைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓக்டோபர் மாதம் கிராமமக்களில் சிலர் 1929 என்ற சிறுவர் முறைப்பாட்டு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அச் சிறுமின் அழுகுரல் அவ் வீட்டில் எப்பொழுதும் கேட்பதாகவும், அழகிய தோற்றம் கொண்ட அஸ்வினி அலங்கோலமான தோற்றத்துடன் காட்சியளிப்பதாகவும் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஜனவரி 09 ஆம் திகதி அஸ்வினி சுகவீனமடைந்த நிலையில் கிராமசேவகர் மற்றும் ஊர் மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அன்றே அவரின் சிறியதாய் வைத்தியசாலையில் இருந்து சிறுமியை அழைத்துச் சென்ற மறுநாள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த நிலையில் சிறுமியின் மரண பரிசோதனையில், சிறுமி அடித்து துன்புறுத்தப்பட்டதாலேயே உயிரிழந்தமை தெரிய வந்துள்ளது.

பெண்கள் மூவர் உட்பட ஆறுபேர் இணைந்து 12 வயதான சிறுமியை அடித்து, காயப்படுத்தி, துன்புறுதி படுகொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் அச்சிறுமியை அவ்வப்​போது அடித்து துன்புறுத்தியதால் உடம்பின் பல இடங்களில் சிறுமிக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த காயங்களின் ஊடாக கிருமித்தொற்றி, உடலுக்குள் புகுந்தத​னாலேயே சிறுமி மரணித்துள்ளார் என மரண பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீதும் படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.