இந்தியாவில் 18 மாநிலங்களில் புதியவகை இரட்டை உருமாறிய கொரோனா… பெரும் அச்சத்தில் மக்கள்

இந்தியாவில் 18 மாநிலங்களில், இரட்டை மரபணு மாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போதும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா வைரசுக்கான மருத்துவ பரிசோதனைகளை துரிதப்படுத்த, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரட்டை மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பரவிவருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த, 24 மணி நேரத்தில், 47 ஆயிரத்து, 262 பேர், கொரோனா வைரசால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக செய்யப்பட்ட பரிசோதனைகளில், கவலை அளிக்கும் விதமாக, இரட்டை மரபணு மாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரசால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 18 மாநிலங்களில், இந்த புதிய வகை வைரஸ் பரவி வருகிறது.

இதைத்தவிர, பிரிட்டன் நாட்டின் புதிய வகை வைரசால், 736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென் ஆப்பிரிக்காவின் புதிய கொரோனா வைரசால், 34 பேரும், பிரேசிலில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.