யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். மாநகரின் மத்திய பகுதி முடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் அவசர கூட்டம் நேற்றைய தினம் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களாவன…
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் கோட்டை பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது.
யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் காங்கேசன்துறை வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். காங்கேசன்துறை வீதி சத்திரச்சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் மூடப்படும்.
யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகள் மட்டும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளன.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மண்டபங்களில் திருமண நிகழ்வுகள், ஏனைய நிகழ்வுகள், கூட்டங்கள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்படவுள்ளன. வீடுகளில் சுகாதார மருத்துவ அதிகாரியின் அனுமதியுடன் வீடுகளில் நடத்த அனுமதிக்கப்படும்.
உயிரிழந்தோரின் இறுதிக் கிரிகைகளுக்கு 25 பேர் மாத்திரம் அனுமதிக்கப்படுவர்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதி முடக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் கோட்டைப் பகுதிக்கு மாற்றப்படுவதுடன், வர்த்தக நிலையங்களும் மூடப்படவுள்ளன.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் மேலும் 60க்கும் மேற்பட்டோருக்கு நேற்றைய தினம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதனையடுத்து யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட சில வர்த்தக தொகுதிகளை மூடுவதற்கு இன்று தீர்மானிக்கப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு கடந்த ஒக்டோபர் மாதத்தின் பின் இவ்வெண்ணிக்கையானது 626ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது வட மாகாணத்தின் அதிகூடிய எண்ணிக்கையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.