அசாத்சாலி கைது – பொலிஸ்மா அதிபருக்கு பறந்த கடிதம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அனைத்துவகையான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக குரல் எழுப்பியவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

எனவே அவர் மீதான விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் உடனடியாக விடுதலை செய்யுமாறும் அந்த கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றையும் ஸ்ரீலங்கா முஸ்லீம் கவுன்சில் அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் ஒரு சில பயங்கரவாதிகள் உட்பட அனைத்து வகையான பயங்கரவாத செயற்பாடுகளுக்கும் எதிராக அசாத் சாலி குரல் எழுப்பியவர் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தள்ளப்படுவது குறித்து நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு சில முஸ்லிம் தலைவர்களில் அசாத் சாலியும் ஒருவர் எனவும் இது குறித்து பலதடவை பாதுகாப்பு தரப்பினருக்கு அசாத் சாலி எழுதியுள்ளதுடன் செய்தியாளர் மாநாடுகளிலும் கருத்து வெளியிட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை முஸ்லிம் சமுகத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பயங்கரவாதத்தை கண்டித்ததுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து சஹரான் மீது முதலில் குற்றச்சாட்டை சுமத்தியவர் அசாத் சாலி எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே இது குறித்து பொலிஸ்மா அதிபர் பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொண்டு அசாத் சாலி குற்றமற்றவர் என்பது உறுதியானால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என முஸ்லிம் கவுன்ஸில் வேண்டுகோள் விடுத்துள்ளது.