யாழில் விடுதலை புலிகளை மீளுருவாக்க முயன்ற பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையில் பிரச்சாரப்படுத்த முயற்சி எடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருவர் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பெண் ஒருவரும், ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அதிரடியாக யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றை முற்றுகையிடப்பட்டபோது, குறித்த இருவரும் கைதாகியுள்ளதாகவும் கூறப்படுகி ன்றது.

சமூக வலைத்தளமான யூடியூப் மற்றும் முகநூலில் இந்த இரண்டு சந்தேக நபர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

யூடியூப் மற்றும் இணையத்தளம் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகள் கைதானவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

35 வயதான பெண் மற்றும் 36 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செய்திகள் குறித்த யூடியூப் மற்றும் இணையத்தளம் ஊடாக வெளியிடப்பட்டு வந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யூடியூப் மற்றும் இணையத்தளம் செயற்படுத்தப்பட்ட இடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு பொறுப்பாக செயற்பட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருவரும் கைது செய்யப்பட்ட இடத்தில் இருந்து 5 மேசைக் கணினிகள் மற்றும் 5 மடிக் கணினிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த இருவரும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு அமைய தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் , இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.