156 மணி நேர போராட்டம்! சூயஸ் கால்வாயில் தரை தட்டிய பாரிய கப்பல் மிதக்கத் தொடங்கியது

சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நின்றது.

ஞாயிறு வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்திருந்தது.

எவர் கிவன் கப்பலுக்கு அடியில் பெரும் அளவில் பாறைகள் இருந்ததாக சூயஸ் கால்வாய் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

உலகின் பிரதான கடல் வழித்தடமான சுயஸ் கால்வாயில் கடந்த 23 ஆம் திகதி தரை தட்டியிருந்த எவர்கிவன் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க ஆரம்பித்துள்ளதாக சுயஸ் கால்வாய் நிர்வாகத்தினரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கப்பல் சிக்கியிருந்தமையினால் சுயஸ் கால்வாயின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், சுமார் 300க்கும் அதிகமான கப்பல்கள் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் கால்வாயின் இருமருங்குகளிலும் நங்கூரமிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், மீட்புக்குழுவினரின் முயற்சியினால் சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளதாகவும், இன்னும் சில மணித்தியாலங்களில் சுயஸ்கால்வாயின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 அவசர மீட்பு படகுகள் மற்றும் 8 மணல் அகற்றும் இயந்திரங்களைக் கொண்டு சுமார் 156 மணி நேரம் இந்த மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.