சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின்னணியில் சூப்பர் மூனின் சக்தியும் முக்கிய காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர் கிவன் நேற்று வெற்றிகரமாக திருப்பப்பட்டது.
ஒரு வாரமாக தரைத்தட்டி இருந்த இந்த கப்பலை திருப்ப கடுமையான முயற்சிகள் செய்யப்பட்டன. இந்த ராட்சத கப்பல் சூயஸ் கால்வாய் போக்குவரத்தை தடுத்து நிறுத்தியதால் பல நூறு கப்பல்கள் கால்வாய் வழியாக பயணம் மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டது.
தற்போது இந்த எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கிய நிலையில் சூயஸ் கால்வாயில் போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளது.
கப்பலுக்கு கீழ் இருந்த மணலை ராட்சத புல்டோசர் வைத்து 4 நாட்களாக நீக்கினார்கள். இதன் வழியாக தண்ணீர் சென்ற போதும் கூட கப்பல் பெரிதாக திரும்பவில்லை.
இதன்பின் இழுவை கப்பல்களை வைத்து இந்த சரக்கு கப்பலை இழுத்தனர். ஆனால் அப்போதும் இதை முழுதாக இழுக்க முடியவில்லை .
இந்த நிலையில்தான் எகிப்தில் சூப்பர் மூன் எனப்படும் பெரிய பவுர்ணமி ஏற்பட்டுள்ளது. பொதுவாக பவுர்ணமி நாட்களில் கடல் அலைகள் அதிகமாக இருக்கும்.
பவுர்ணமி காரணமாக ஏற்பட்ட நிலவின் ஈர்ப்பு விசையால் இரண்டு பக்கமும் கடலில் பெரிய அலைகள் தோன்றி உள்ளன.
இதனால் சூயஸ் கால்வாய்க்கு அதிக அளவில் அலையோடு தண்ணீர் வந்துள்ளது. முக்கியமாக நேற்று முதல்நாள் இரவு அதிக அளவு தண்ணீர் வந்துள்ளது.
இதன் காரணமாகவே எவர் கிவன் கப்பலுக்கு தடையாக இருந்த பாறை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வரத்து அதிகம் ஆகியுள்ளது. இதுதான் நிலைமையை மாற்றியது.
இதன்பின்னரே மொத்தமாக மணல் எல்லாம் அடித்து சென்று, தரைதட்டிய கப்பல் மிதக்க தொடங்கி உள்ளது.
குறுக்காக தரைதட்டி நின்ற இந்த கப்பலை மீட்க அவ்வளவு கஷ்டப்பட்ட நிலையில் ஒரே இரவில் நிலவு இந்த கப்பலை திருப்பி உள்ளது.
பலத்த காற்றில் சிக்கி தரைதட்டிய கப்பலை அதே இயற்கை தற்போது விடுவித்து அதன் பயணத்தை தொடர வைத்துள்ளது.