யாழ் மாநகர சபை முதல்வர் சற்று முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கை!

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என யாழ் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வி.மணிவண்ணன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யாழ் நகரில் சடுதியாக ஏற்பட்ட கொரோனா பரவலை அடுத்து மாநகரத்தில் பல நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டதனால் வர்த்தகர்களும் பொது மக்களும் பல அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர்.

இதனை தொடர்ந்து வர்த்தகர்களிடமிருந்து 1000 இற்கும் மேற்பட்ட PCR பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில் இவற்றின் முடிவுகள் என்னும் வெளியிடப்படவில்லை. இவை தொடர்பில் பல முறைப்பாடுகள் வர்த்தகர்களிடமிருந்தும் பொது மக்களிடமிருந்தும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டதை தொடர்ந்து நான் பொது சுகாதார வைத்திய அதிகாரியுடன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்ந்தேன்.

குறித்த பரிசோதனைகள் கொழும்பில் மேற்கொள்ளப்படுவதால் அதன் முடிவுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது என்றும் பெரும்பாலும் அம் முடிவுகள் இன்று கிடைக்கப்பெறலாம் என்று அறியக்கிடைத்துள்ளது. உறுதிப்படுத்தப்படாது கிடைத்த தகவலின்படி 10% இற்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அறியக்கிடைக்கின்றது. விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

மேலும் புது வருடம் அண்மிக்கின்ற நிலையில் விரைந்து வர்த்தக நிலையங்களை திறக்க வேண்டும் என்ற எனது கரிசனையை வெளிப்படுத்தினேன். குறித்த விடயம் தொடர்பில் இன்று நடைபெற உள்ள அவசர கலந்துரையாடலில் எனது கருத்தை வலியுறுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

கொரோனா கட்டுப்பாடு தொடர்பிலான தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணுகின்றேன். தற்போது நான், ஆணையாளர், பிரதி ஆணையாளர், செயலாளர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர் என சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாநகர சபையின் செயற்பாடுகளும் தேக்கமடைந்துள்ளதன. இது தொடர்பில் எனது பணிகளை மீண்டும் ஆரம்பித்ததும் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாட விரும்புகின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.