இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா ; ரயில் பெட்டிகள் வார்டுகளாக மாறும் அவலம்!

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாறும் அவலம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தீவிரமான நிலையில் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தனியார் கட்டிடங்கள், ரயில் பெட்டிகளும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு பின்னர் கொரோனா கட்டுக்குள் வந்தபின்னர் அனைத்தும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து மருத்தவமனைகள் நிரம்புவதால் தற்போதும் ரயில்பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள் மீண்டும் கோரப்பட்டுள்ளன.

நந்தூர்பார் பகுதியில் கொரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளின் தேவைக்காக, இந்திய ரயில்வேயிடம் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை மாவட்ட நிர்வாகம் கோரியுள்ளது. அதன்படி இதுவரை 21 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளின் ஒவ்வொரு பெட்டியிலும் 16 நோயாளிகள் தங்கவைக்க வசதி உள்ளது. இந்த நிலையில் இன்னும் இதுபோல 90 பெட்டிகளை நந்தூர்பார் நிர்வாகம் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு, கேரளாவிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கும் இந்த நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.