தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, அதிமுகவுடன் சசிகலா இணைவாரா என்ற கேள்வி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எழ தொடங்கியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று (மே.2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் திமுக முன்னனிலை பெற்றுள்ளது.
அதிமுக எதிர்க்கட்சியாக அமரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சவால் அளிக்க வேண்டுமெனில், கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்றும், அதற்கு சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்ற குரல் எழுகிறது. பிற்பகல் 4 மணி நிலவரப்படி, மொத்தம் 234 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.
இதில், 155 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. 78 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு தொகுதியில் மட்டும் முன்னிலை பெறுகிறது. அங்கு கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா இல்லாத அதிமுக, அசுர பலமில்லாத தலைமை என்று பல காரணிகளை பட்டியலிட்டு, அதிமுகவை இந்த தேர்தலில் திமுக வாஷ் அவுட் செய்யும் என்றே அக்கட்சியின் ஆதரவாளர்கள் பலர் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், தற்போதையை நிலவரப்படி அதிமுக கூட்டணி 78 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
வாக்கு சதவிகிதமும் ஏறக்குறைய இணையாக உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக 3 இடங்களிலும், பாமக 5 இடங்களிலும் இதுவரை முன்னிலையில் உள்ளன.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ஃபேக்டர் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருப்பது, பாமக 5 இடங்களில் முன்னிலை வகிப்பதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. இத்தனைக்கும் தேமுதிக கூட்டணியை விட்டு வெளியேறிய தகதக சூழலிலும், அதிமுக இத்தனை தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
ஒருவேளை தேமுதிகவும் கூட்டணியில் இருந்திருந்தால், திமுகவுக்கு அது மேலும் சற்று பின்னடைவை கொடுத்திருக்கலாம். அதேபோல், அமமுக பல தொகுதிகளில் அதிமுக வாக்குகளை பிரித்திருக்கிறது. டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைந்திருந்தால், திமுக தோல்வி கூட அடைந்திருக்க வாய்ப்புண்டு.
பட். இப்போதுள்ள நிலைமையில், திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 10 ஆண்டுகால அதிகாரத்தை இழக்கிறது அதிமுக. எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஓரளவுக்கு பெயர் எடுத்திருந்தாலும், தேர்தலில் வெற்றிப் பெற அது போதுமானதாக இருக்கவில்லை.
இதனால், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்ற நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், சசிகலாவுடன் அதிமுக இணைவது தான் அக்கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆம்! தனிப்பட்ட முறையில் டிடிவி ஃபேக்டர் சக்ஸஸ் ஆகவில்லை என்றாலும், அவர் அதிமுகவுடன் இருந்திருந்தால், திமுகவிற்கு சென்ற பல வாக்குகள் அதிமுகவிற்கு வந்திருக்கும். அதை எடப்பாடியார் தவறவிட்டுவிட்டார்.
ஸோ, இனி 2026 தேர்தலில் அதிமுக தாக்குப்பிடிக்க வேண்டுமெனில், சசிகலா எனும் முக்கிய பெயரை எடப்படியார் அதிமுகவில் சங்கமித்து ஆக வேண்டும். அப்படி ஒருங்கிணையவில்லை எனில், அடுத்த தேர்தலிலும் அவர் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. அதிகாரத்தில் இருக்கும் போதே, எடப்படியார் தலைமையிலான அதிமுக வெற்றிப் பெறவில்லை எனில், பதவியில் இல்லாத போது எப்படி ஜெயிக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தவிர, இந்த தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி ஸ்டாலின் வென்றிருப்பதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் கூட, கொளத்தூரில் இவ்வளவு வாக்குகள் பெறவில்லை. அவரையே மிஞ்சிவிட்டார் உதயநிதி.
அப்படியெனில், அடுத்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதியின் ஆதிக்கம் எந்தளவு இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, சீமானும் ஒரு எக்ஸ்-ஃபேக்டராக நடப்பு தேர்தலில் தன்னை நிரூபித்து இருக்கிறார். நடிகர் விஜய் கூட, அடுத்த தேர்தலில் களம் கண்டால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவ்வளவு சவால்களை அதிமுக எடப்பாடியார் தலைமையில் மட்டும் சமாளித்துவிட முடியாது. அதற்கு சசிகலா எனும் பலமும் தேவை. கட்சியின் எதிர்கால நலன் கருதி எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுடன் இணையும் முடிவெடுப்பாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.