தமிழகத்தில் கடன் சுமையால் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தம்பதியரும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், நகைக்கடை பஜாரில் நகைப்பட்டறை வைத்து நகைத் தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மனைவி விஜி என்ற ஸ்ரீநிதி, இவர்களுக்கு மகாலட்சுமி, அபிராமி என இரு மகள்களும் மற்றும் அமுதன் என்ற மகனும் இருக்கிறார்.
சரவணனுக்கு நிறைய கடன் பிரச்சனைகள் இருந்ததால், மன உளைச்சலில் இருந்திருக்கிறார், இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல எழுந்து வீட்டை திறந்து கோலமிட்டு சற்று நேரத்தில் வீட்டை பூட்டிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வீடு அதிக நேரமாக பூட்டியே கிடந்தால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த அனைவரும் சடலமாய் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் தன்னை தனது குடும்பத்தினர் கடனாளியாக ஆக்கி ஒரு ரூபாய் கூட குடும்பத்திற்கு ஒதுக்க முடியாமல் செய்துள்ளதாக சரவணன் கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார், இறந்தவர்களின் உடல்கள் அனைத்தையும் உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.